உயிருக்கு மிகவும் ஆபத்து விளைவிக்கும் நோய்களில் ஒன்றாக புற்றுநோய் உள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
புற்றுநோய் காரணமாக 2020-ம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி நபர்கள் இறந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியிருக்கிறது. புற்றுநோய் பாதிப்பானது மார்பகம், வாய், கர்ப்பப்பை, இரைப்பை, நுரையீரல், ரத்தம் என உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும். பெரும்பாலும் இது உடனடியாக வீரியம் அடைவதில்லை. படிபடியாக வீரியம் அடைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. சிலருக்கு ஆரம்பத்திலேயே அறிகுறிகள் தென்படும். எனவே, ஆரம்பகாலத்தில் கண்டறிந்து நோய்த்தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம். புற்றுநோய் பாதிப்புக்கு மரபணு முக்கிய காரணமாக இருந்தாலும், வாழ்க்கை முறையும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன.
புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் வலுவான உலகளாவிய முயற்சிகள் தேவை. எனவே, புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக 2000-ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு, பிப்ரவரி 4-ம் தேதியை 'உலக புற்றுநோய் தினமாக'அறிவித்தது. உலக அளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், நோய் தடுப்புக்கான சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும்.
அவ்வகையில் இந்த ஆண்டு உலக புற்றுநோய் தினம் நாளை (4-2-2025) கடைபிடிக்கப்படுகிறது.
முறையான உணவுமுறை, உடற்பயிற்சி, பரிசோதனைகளை செய்வதன்மூலம் இந்த நோயின் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும்.
திடீரென உடல் எடை குறைதல், தோலில் ஏற்படும் நிறமாற்றம், திடீர் கட்டிகள், தொடர்ந்து சோர்வு ஏற்படுதல், தொடர்ச்சியான இருமல், எந்த காரணமும் இன்றி வயிறு, முதுகு அல்லது மூட்டுகளில் ஏற்படும் அதீத வலி போன்றவை புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, சாதாரண மருந்து மாத்திரைகளில் குணமடையாதபட்சத்தில் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.