சிங்கப்பூர்,
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனும் (சீனா), கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியாவின் குகேசும் நேருக்கு நேர் மோதுகிறார்கள்.
அடுத்த மாதம் 13-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டி மொத்தம் 14 சுற்றுகளை கொண்டது. வெற்றிக்கு ஒரு புள்ளியும், டிராவுக்கு அரைபுள்ளியும் வழங்கப்படும். முதலில் 7.5 புள்ளியை எட்டுபவர் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். 14 சுற்று முடிவில் இருவரும் சமநிலையில் இருந்தால், வெற்றியாளரை முடிவு செய்ய டைபிரேக்கர் கடைபிடிக்கப்படும்.
கிளாசிக்கல் முறையில் நடக்கும் இந்த போட்டியில் முதல் 40 நகர்த்தலுக்கு 120 நிமிடங்களும், எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்களும் ஒதுக்கப்படும். இது தவிர 40-வது நகர்த்தலில் இருந்து ஒவ்வொரு நகர்த்தலுக்கும் 30 வினாடி கூடுதலாக வழங்கப்படும். 40-வது நகர்தலுக்கு முன்பாக டிராவில் முடிக்க அனுமதிக்கப்படாது.