
பிரேசிலியா,
உலக குத்துச்சண்டை கோப்பை போட்டி பிரேசிலில் நடைபெற்றது. இந்த போட்டியில் 19 நாடுகளை சேர்ந்த 130 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 70 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் ஹிதேஷ் முன்னேறினார். இவர் அரையிறுதியில் 5-0 என்ற கணக்கில் பிரான்சின் மகான் டிராரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
அவர் இறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் ஒடெல் கமாரா உடன் மோத இருந்தார். இந்நிலையில் காயம் காரணமாக ஒடெல் கமாரா விலகிய நிலையில் இந்திய வீரர் ஹிதேஷ் போட்டியிடாமலே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு தங்கப்பதக்கம் பெற்றார்.
இதன் மூலம் இந்த தொடரில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஹிதேஷ் படைத்துள்ளார்.
இந்த தொடரில் இந்தியா மொத்தம் ஒரு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என 6 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியது.