சென்னை: உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை கண்காணித்து, கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணைய பரிந்துரை செய்துள்ளது. வேலூர் மாவட்டம், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு இறந்த 70 வயது முதியவர் ராஜாராமன் என்பவரின் உடலை அடக்கம் செய்வதற்காக 3 சக்கர குப்பை வண்டியில் பொதுவெளியில் எடுத்து சென்றுள்ளனர். இதுதொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இவ்வழக்கு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர், இந்த வழக்கில் மரணத்திற்கு பிந்தைய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது. இது மனித உரிமை மீறிய செயலாகும். தமிழகம் முழுவதும் உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துகளுக்கு தமிழக அரசு உடனடியாக சுற்றறிக்கை வெளியிட வேண்டும். உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தேவையான நிதியை ஒதுக்குவது தொடர்பாக உரிய வழிக்காட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார்.
The post உரிமை கோரப்படாத இறந்தவர்களின் உடல்களை கண்ணியமாக அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை: அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரை appeared first on Dinakaran.