உயிர் உரம்… பயிர்களுக்கு வரம்! 

3 months ago 21

Fertilizer,corpsஉயிர் உரங்கள் பயிர்களுக்கு பல்வேறு வகைகளில் பலன் அளிப்பவையாக உள்ளன. அவற்றில் ரைசோபியம், அசட்டோபேக்டர், அசோஸ்பைரில்லம் போன்றவை முக்கியமானவைகளாக கருதப்படுகின்றன. இத்தகைய உயிர் உரங்கள் குறித்தும், அவற்றின் தன்மைகள் குறித்தும் கொஞ்சம் சுருக்கமாக காண்போம்.

ரைசோபியம்

இந்த வகை நுண்ணுயிரிகள் பயறு வகைப் பயிர்களுடன் வேரில் கூட்டுறவாக வாழ்ந்துகொண்டு காற்றில் உள்ள தழைச்சத்தினைக் கிரகித்து வேர்களில் வேர்முடிச்சுகள் மூலம் நிலைநிறுத்த வல்லவை. ஒரு ஹெக்டருக்கு 50-300 கிலோ தழைச்சத்தை மண்ணில் சேர்க்கும். இந்த வகை நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துவதால் 10-35 சதவீதம் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். பச்சைப்பயிறு, உளுந்து, காராமணி, துவரை, கொண்டைக்கடலை, சோயா பீன்ஸ் மற்றும் நிலக்கடலை போன்ற பயறு வகைப் பயிர்களுக்கு விதை நேர்த்தியாகவோ அல்லது மண்ணில் கலந்தோ ரைசோபியத்தைப் பயன்படுத்தலாம்.

அசட்டோபாக்டர்

இவை தனித்து வாழும் நுண்ணுயிரிகள். இவற்றுக்கு பயறு வகைப் பயிர்கள் தேவைப்படாது. இந்த வகை நுண்ணுயிரிகள் காற்றில் உள்ள தழைச்சத்தினை நிலைநிறுத்தி மண்ணில் அவை கிடைக்கச் செய்கின்றன. ஏறத்தாழ 25 கிலோ தழைச்சத்தை ஒரு ஹெக்டேருக்கு நிலைநிறுத்த வல்லவை. அதிகபட்சம் 50 சதவீதம் மகசூல் கூடுதலாக கிடைக்கும். சிறுதானியங்கள், காய்கறி பயிர்கள், கரும்பு போன்ற பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.

அசோஸ்பைரில்லம்

இந்த நுண்ணுயிரிகள் தனித்து வாழ்ந்து காற்றில் உள்ள தழைச்சத்தினை 20-40 கிலோ அளவுக்கு (எக்டருக்கு) நிலை நிறுத்துபவை. பயிர் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்ய வல்லவை. வேர்முடிச்சுகள் உருவாக்காது. மக்காச்சோளம், கரும்பு, சோளம் போன்ற பயிர்களுக்கு இவற்றைப் பயன்படுத்தலாம்.

நீலப்பச்சைப் பாசி

நீலப்பச்சைப் பாசி பச்சையம் உள்ள தனித்து வாழும் பாசி வகையைச் சார்ந்தது. எந்தப் பயிருடனும் சேர்ந்து வாழும் தன்மை இல்லை என்றாலும் தழைச்சத்தினை நிலைநிறுத்த வல்லவை. நீலப்பச்சைபாசிகள் நைட்ரோஜோனேஸ் என்ற நொதிகளை உருவாக்கி அதன்மூலம் தழைச்சத்தினை மண்ணிற்கு சேர்க்கின்றன. நீலப்பச்சைப்பாசி வளர்ந்த மண் உரமாக பயன்படுகிறது. வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு உரமாக பயன்படுத்தலாம்.

அசோலா

உயிர் உரங்களில் அசோலா மிகச்சிறந்த பலன் அளிக்கும். இது கம்மல் பாசி என்றும் அழைக்கப்படுகிறது. இது தண்ணீரில் மிதக்கும். காற்றில் உள்ள தழைச்சத்தினை “அனபினா அசோலா” என்ற நீலப்பச்சைப் பாசியுடன் இணைந்து தழைச்சத்தினைச் சேர்க்கும். சிறந்த கால்நடை மற்றும் கோழித் தீவனமாகவும் பயன்படும். நெல் வயல்களில் சிறந்த உயிர் உரமாக செயல்படும். இவற்றின் மூலம் களைகள் கட்டுப்படும். ஒரு எக்டருக்கு 40-60 கிலோ தழைச்சத்தினை அளிக்க வல்லது.

மணிச்சத்தைக் கரைக்கும் நுண்ணுயிரிகள்

பல நுண்ணுயிரிகள், பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மண்ணில் கரையா நிலையில் உள்ள மணிச்சத்தினைக் கரைத்து அவற்றைப் பயிருக்கு கிடைக்கச் செய்கின்றன. இந்த வகையில் உயிர் உரங்களை விதையுடன் கலந்து விதைப்பதின் மூலம் பயிருக்குத் தேவையான 50 சதவீத மணிச்சத்தைக் குறைக்கலாம். அனைத்துப் பயிர்களுக்கும் இந்த உரங்களைப் பயன்படுத்தலாம்.

வேர் உட்பூசனம்

பயிரின் வேர்களுக்குள் மண்ணில் உள்ள பூசனங்கள் இணைந்து வாழ்ந்து மண்ணுக்கும் பயிர்களுக்கும் சத்துப் பரிமாற்றம் செய்கிறது. இதில் வேரின் உட்புறம் ஒரு வகை பூசனம் வளரும். வேரின் வெளிப்புறம் ஒருவகை பூசனம் வளரும். இந்த வேர் உட்பூசனங்கள் பயிரின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மண்ணில் உள்ள சத்துக்கள் பயிருக்கு எளிதாக கிடைக்கிறது. மிக முக்கியமாக தழை மற்றும் மணிச்சத்து தேவையான அளவு கிடைப்பதால்
பயிரின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பயிரின் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். மண்வளம் காக்கப்படும். ரசாயன உரங்களின் தேவை குறையும். வளம் குறைந்த மண் வளமாகும்.

சாம்பல் சத்து கரைக்கும் உரங்கள்

இந்த வகை நுண்ணுயிரிகள் பயிரின் வேர்ப்புறத்தில் இருந்துகொண்டு பயிருக்குக் கிடைக்காத நிலையில் உள்ள சாம்பல் சத்தினைக் கரைத்து பயிருக்கு அளிப்பதில் வல்லவை. சாம்பல் சத்து பயிரின் வளர்ச்சிக்கு மிக முக்கியம். இதன் குறைபாட்டால் பயிர் மிக மெதுவாக வளரும். வேர்கள் நன்கு வளராது. குறைந்த அளவு தானிய மகசூல் கிடைக்கும். எனவே சாம்பல் சத்தினைக் கரைக்கும் உயிர் உரங்கள் பயிரின் வேர்ப்பகுதிகளில் கரையாத நிலையில் உள்ள சாம்பல் சத்தினைப் பயிருக்கு கிடைக்கச் செய்கிறது.

உயிர் உரங்களை இடும் முறைகள்

விதைநேர்த்தி: ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை, அந்தப் பயிருக்கு ஏற்ற நுண்ணுயிர்களைத் தேர்ந்தெடுத்து, பரிந்துரை செய்யப்பட்ட அளவில் கலந்து ஒரு நாள் இரவு வைத்திருந்து பின்னர் விதைக்கலாம்.

நாற்றில் நனைத்து நடுதல்: இது நெல் வயலுக்கு மட்டுமே பொருந்தும். உயிர் உரங்கள் கரைசலில் நாற்று நடுவதற்கு முன் 10 நிமிடம் வேர்களை நனைத்து நடவு செய்யலாம், அல்லது நாற்றுகளை உயிர் உரங்களில் 8 – 10 மணி நேரம் கழித்து நடவு செய்யலாம்.

நடவு வயல்

தேவையான உயிர் உரங்களை 20 கிலோ மக்கிய, தூளாக்கப்பட்ட தொழுஉரத்துடன் கலந்து நாற்று நடுவதற்கு முன்னர் வயலில் சீராக தெளிக்கலாம்.

The post உயிர் உரம்… பயிர்களுக்கு வரம்!  appeared first on Dinakaran.

Read Entire Article