கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு அனைத்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வந்திருந்தனர். காலை 10.30 மணிக்கு இந்த வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார். இதற்கு மாதர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்தனர். பின்னர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராதிகா கூறியதாவது: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. திமுக ஆட்சியில் இந்த வழக்கு துரிதமாக மேற்கொள்ளப்பட்டு சிபிஐ விசாரணை நடந்தது. மேலும் தமிழக அரசும் பாலியல் வழக்கில் சிறப்பு சட்டம் இயற்றியது. தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள், சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வழக்கில் போக்சோ வழக்கு பதிவு செய்வதே காவல் நிலையங்களில் அரிதாக உள்ளது. பெண்கள், பாதுகாப்பாக சுதந்திரமாக நடமாட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த வழக்கின் தீர்ப்பு அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
மாதர் சங்க நிர்வாகி ராஜலட்சுமி என்பவர் கூறுகையில், ‘‘ஜனநாயக மாதர் சங்கம் இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு உச்ச பட்ச தண்டனையான சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்’’ என்றனர். அதன்பின்னர் பொள்ளாச்சி வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோர்ட் வளாகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். அவர்கள் இந்த தீர்ப்பை வரவேற்று கோஷம் எழுப்பினர்.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு; திமுக அரசுக்கு மாதர் சங்கம் பாராட்டு appeared first on Dinakaran.