சென்னை: கால்நடை வியாதிகளுக்கு மருந்து இயக்குமதி செய்ய ஆப்பிரிக்கா நாட்டு ஏஜெண்ட் உரிமம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.22.60 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த 2 பேரை சைபர் க்ரைம் போலீசார் தெலங்கானாவில் கைது செய்தனர்.சென்னை சவுகார்பேட்டை நாராயண முதலி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் பி கவாட்(53). தொழிலதிபரான இவர், சங்கர்ஜி பிரித்விராஜ் மற்றும் சன்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த பிப்ரபரி 29ம் தேதி அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த ஹென்றி மென்சா என்பவர் தொடர்பு கொண்டு, மேற்கு ஆப்பிரிக்காவில் கெலக்ஜி கால்நடை நிறுவனம் மூலம் கால்நடைகளுக்கு பல்வேறு வியாதிகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கான மருந்துகள் வழங்கி வருகிறேன் என்று பேசியுள்ளார். இந்தியாவில் எனது நிறுவனம் நடத்த விரும்புவதாகவும், அதற்கான இந்திய ஏஜெண்டாக உங்களை நியமித்துள்ளேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பிறகு டெல்லியில் இயங்கும் நிறுவனம் மூலம் டாக்டர் முகமது ஐசாகா என்பவரிடம் 150 லிட்டர் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதை நம்பி 30 லிட்டர் மருந்துக்கு முதற்கட்டமாக ரூ.22.60 லட்சம் பணத்தை 9 தவணைகளாக அனுப்பி வைத்துள்ளார். ஆனால் கொரியர் மூலம் 8 லிட்டர் மருந்து மட்டும் அவருக்கு கிடைத்துள்ளது. அதன் பிறகு ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து தொடர்பு கொண்ட நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை தொழிலதிபர் சுரேஷ்குமார் உணர்ந்தார்.
அதனை தொடர்ந்து சம்பவம் குறித்து தொழிலதிபர் சுரேஷ்குமார் போலீஸ் கமிஷனர் அருணிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் மனோகருக்கு உத்தரவிட்டார். அதன்படி வடக்கு மண்டல சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்திய போது, தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டம் மல்லாரம் பகுதியை சேர்ந்த அஜ்மீரா சுதாகர்(31) மற்றும் ஆந்திரா மாநிலம் பாலநாடு மாவட்டம் மார்கபூர் பகுதியை சேர்ந்த யரகோர்லா ஸ்ரீனு(எ)அகில்(32) ஆகியோர் இணைந்து தொழிலதிபரை ஏமாற்றி பணம் பறித்தது உறுதியானது.
மேலும், தொழிலதிபரிடம் பெற்ற பணத்தை தனது பெயருக்கு மாற்றி ரூ.20.40 லட்சம் ரூபாய் மும்பை செம்பூரில் உள்ள வங்கிகளுக்கு நேரில் சென்று காசோலை மூலமாகவும், ஏடிஎம் மூலமாகவும் பணத்தை பெற்றது தெரியவந்தது. அஜ்மீரா சுதாகர் மீது மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் இதுபோல் 6 மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் உறுதியானது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் தெலங்கானா மற்றும் ஆந்திரா சென்று 2 குற்றவாளிகளையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய 2 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டது.
The post கால்நடை வியாதிகளுக்கு மருந்து இயக்குமதி செய்ய ஆப்பிரிக்கா நாட்டு ஏஜெண்ட் உரிமம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.22.60 லட்சம் மோசடி: தெலங்கானாவில் பதுங்கி இருந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.