உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஆபத்தை உணராமல் ஏரியில் மீன் பிடிக்கும் சிறுவர்கள்

4 days ago 2

ஆர்.கே.பேட்டை, மே 16: ஆர்.கே.பேட்டையில், கோடை விடுமுறை என்பதால், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் ஏரி குளங்களில் குளிக்க, மீன்பிடிக்கச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஆறுகள், ஏரிகள், குளங்கள் என நீர்நிலைகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஆறுகள், ஏரிகள் நிரம்பி உபரி நீரும் வெளியேறி வருகிறது. இதுபோன்ற சமயங்களில் நீர்நிலைகளில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ, புகைப்படம் எடுக்கவோ செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

இருப்பினும், அதனை உணராமல் ஒரு சிலர் குளிக்கும்போது தவறி நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து நிகழ்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட தலைநகரில் உள்ள  வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் சந்தியா வந்தனம் என்ற பூஜை செய்தபோது 3 வேத பாடசாலை மாணவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கிருஷ்ணா கால்வாயில் அடிக்கடி குளிக்கச் செல்லும் சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தற்போது கோடை விடுமுறை என்பதால் ஆர்.கே.பேட்டை அடுத்த சந்திரவிலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள், குளம் மற்றும் ஏரியில் மீன் பிடிப்பதற்கு செல்கின்றனர். மேலும், அருகாமையில் உள்ள  காளிகாபுரம் ஏரியிலும் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் மீன் பிடிக்கின்றனர். எனவே, ஆபத்தை உணராமல் குளம் மற்றும் ஏரியில் சிறுவர்கள், போதிய பாதுகாப்பின்றி மீன் பிடிக்க செல்வதாலும், குளிப்பதாலும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் ஆபத்தை உணராமல் ஏரியில் மீன் பிடிக்கும் சிறுவர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article