உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி மீண்டும் துவக்கம்

3 weeks ago 11

வடலூர், அக். 24: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் கட்டுமான பணிகள் 2வது பகுதியில் தொடங்கியது. கடலூர் மாவட்டம், வடலூரில் திரு அருட்பிரகாச வள்ளலார் சத்தியஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறும். மாதந்தோறும் மாத பூச ஜோதி தரிசனம் நடந்து வருகிறது. மேலும் தருமசாலையில் உள்ள அணையா அடுப்பு பலரின் பசியை போக்கி வருகிறது. இந்நிலையில் வள்ளலார் சர்வதேச மையம் ரூ.99.90 கோடியில் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து, அதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி தொடங்கியது. இதையடுத்து சத்தியஞான சபை பெருவெளியில் சர்வதேச மையம் அமைக்க சில அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை மீறி வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க அஸ்திவாரம் தோண்டப்பட்டு பணிகள் நடந்தபோது, எதிர்ப்பு தெரிவித்து பார்வதிபுரம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் தேர்தல் முடிந்து மீண்டும் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி துவங்கியது. பாதுகாப்புக்காக சர்வதேச மையம் அமைக்கும் பகுதியை சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. மேலும் தோண்டப்பட்ட அஸ்திவாரத்தில் பழங்கால சுவர்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் அப்பகுதியில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள்‌ கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கு தடை கோரியும், வள்ளலார் தெய்வ நிலையத்திற்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் இடத்தை தொல்லியல் துறை குழு அமைத்து ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்யும்படி தொல்லியல் துறை மற்றும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில், பெருவெளியில் நடந்து வந்த கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள், வள்ளலார் தெய்வ நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தெய்வ நிலையத்திற்கு அறங்காவலர்கள் குழு அமைக்க வேண்டும், மேலும் அனைத்து துறைகளிடமும் அனுமதி பெற்று சர்வதேச மையம் அமைக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, சத்தியஞான சபை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அறங்காவலர்கள் குழுவும் நியமிக்கப்பட்டது. மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு ஆக்கிரமிப்பு நிலங்கள் யார் பெயரில் உள்ளது என விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆட்சியர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்தார். இதைதொடர்ந்து கடந்த 10ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், சர்வதேச மையம் கட்டுமான பணிகளை 2 வது பகுதியில் மட்டும் (சைட் Bயில்) தொடங்க அனுமதி வழங்கியது. மேலும் 1 வது பகுதியில் (சைட் Aயில்) மறு உத்தரவு வரும் வரை எந்தவித பணிகளையும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது. இதைதொடர்ந்து வடகிழக்கு பருவமழை காரணமாக பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது சர்வதேச மையம் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் 2வது பகுதியில் (சைட் Bயில்) மட்டும் நேற்றுமுன்தினம் துவங்கி உள்ளது. மேலும் அப்பகுதியில் சித்த மருத்துவமனை, முதியோர் இல்லம், பக்தர்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவை 1 ஏக்கர் பரப்பளவில் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.

The post உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணி மீண்டும் துவக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article