டேராடூன்: உத்தரகாண்ட் எல்லை கிராமத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய 50 பேரை மீட்டாலும், அதில் 4 ஊழியர்கள் பலியாகி விட்டனர். மேலும் 5 பேரை மீட்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள எல்லை கிராமமான மானா அருகே நேற்றுமுன்தினம் காலை ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில், எல்லைச் சாலைகள் அமைப்பு எனும் ராணுவப் பிரிவைச் சேர்ந்த 55 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, அவர்களை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டது. நேற்று முன்தினம் இரவு வரை நடந்த மீட்பு பணியில் 33 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். அதை தொடர்ந்து மேலும் பனிச்சரிவு ஏற்பட்டதால் இரவு மீட்பு பணி நிறுத்தப்பட்டது. நேற்று காலை வானிலை ஓரளவு சரியாக இருந்ததால் கூடுதல் வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பிற்பகலில் 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்டு விட்டனர். மேலும் பனிச்சரிவில் சிக்கியுள்ள 5 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்தது. இந்த மீட்பு பணியில் 6 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஊழியர்களில் பலர் காயங்களுடன், மூச்சுத் திணறலுடன் காணப்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களில் 11 பேர் ஜோதிர்மாத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலருக்கு எலும்பு முறிவும், மற்றவர்களுக்கு சிறு காயங்களும் உள்ளன. இந்த நிலையில் மீட்கப்பட்ட 50 பேரில் 4 தொழிலாளர்கள் பலியாகி விட்டனர். இதை ராணுவம் உறுதிப்படுத்தியது. மீதம் உள்ள 46 பேருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மீட்பு பணியில் ஊழியர்கள் தங்கியிருந்த 5 முகாம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் 3 முகாம்களை காணவில்லை. அதை கண்டுபிடித்தால், மீதம் உள்ள 5 வீரர்களை மீட்டுவிடலாம் என்பதால் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நேற்று காலை ஹெலிகாப்டரில் சென்று நிலைமையை பார்வையிட்டார். மீட்புப் பணியை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். ஜோதிர்மாத் மருத்துவமனைக்கு சென்று மீட்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆறுதல் கூறினார். அதோடு பனிச்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு செய்தார். அவரிடம் பிரதமர் மோடி பேசி நிலைமையை கேட்டறிந்தார். மீட்பு பணிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்யும் என்று தெரிவித்தார். இதற்கிடையே ராணுவம் சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் அனிந்த்யா சென்குப்தா மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் டிஜி மிஸ்ரா ஆகியோர் மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்க பனிச்சரிவு நடந்த இடத்திற்கு சென்றனர். அவர்களும் மீட்பு பணியை முடுக்கி விட்டனர்.
இமாச்சலிலும் பாதிப்பு
உத்தரகாண்ட் அண்டை மாநிலமான இமாச்சலிலும் கனமழை மற்றும் பனிப்பொழிவால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குலு நகரில் பெய்த மேக வெடிப்பு மழையால் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவும், சாலை துண்டிப்பும் ஏற்பட்டுள்ளது. காங்க்ரா மாவட்டத்தில் உள்ள ரோகாருவில் 12 வீடுகள் சேதம் அடைந்தன. சம்பாவில் பாங்கி பள்ளத்தாக்கில் பனிப்பொழிவால் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
பாலம்பூரில் உள்ள சிவன் நீர்மின் திட்டம் அருகே ஒருவர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தோலு நுல்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவால், கிராத்பூர்-மனாலி தேசிய நெடுஞ்சாலை தடைபட்டதால், சுற்றுலா பயணிகள் தவித்தனர். குலுவில் மொத்தம் 112 சாலைகள் மூடப்பட்டன. குலு-மனாலி சாலையும் மூடப்பட்டது. இதே போல் காஷ்மீரிலும் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 12க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குன்பர்-பீரா சுரங்கப்பாதையில் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
The post உத்தரகாண்ட் எல்லையில் மீட்புப்பணி; 4 ஊழியர்கள் பனிச்சரிவில் சிக்கி பலி: 46 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை appeared first on Dinakaran.