உத்தர பிரதேசத்தில் ஆசிரியரை குடும்பத்துடன் கொலை செய்த வாலிபருக்கு காலில் துப்பாக்கி சூடு

3 months ago 23

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள அகோர்வா பவானி பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சுனில் குமார்(35), அவரது மனைவி பூனம்(32), அவரது இரண்டு மகள்கள் திரிஷ்டி(6) மற்றும் சுனி(1) ஆகிய 4 பேரை சந்தன் வர்மா என்ற நபர் கடந்த வியாழக்கிழமை சுட்டுக்கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து டெல்லிக்கு தப்ப முயன்ற சந்தன் வர்மாவை, நேற்று இரவு நொய்டாவில் உள்ள சுங்கச்சாவடி அருகே போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், சந்தன் வர்மாவிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் கொலைக்காக பயன்படுத்த துப்பாக்கியை ஒரு வாய்க்கால் அருகே கண்டெடுத்தனர். அந்த துப்பாக்கியை எஸ்.ஐ. மதன்குமார் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, சந்தன் வர்மா அவரிடம் இருந்து துப்பாக்கியை பிடுங்கி சுட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக இன்ஸ்பெக்டர் சச்சிதானந்த் ராய் என்பவர், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சந்தன் வர்மாவின் வலது காலில் சுட்டார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சந்தன் வர்மாவை சிகிச்சைக்காக அமேதி அரசு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு அவரது காலில் இருந்து துப்பாக்கி குண்டு அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து சந்தன் வர்மாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக இந்த கொலை சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. அனூப் குமார் கூறுகையில், ஆசிரியர் சுனில் குமாரின் மனைவியுடன் சந்தன் வர்மாவுக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், சம்பவத்தன்று ஆசிரியர் சுனில் குமாரின் வீட்டிற்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தன் வர்மா, ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அனைவரையும் சுட்டுக்கொலை செய்துள்ளார் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே ஆசிரியர் சுனில் குமாரின் மனைவி பூனம், கடந்த ஆகஸ்ட் 18-ந்தேதி சந்தன் வர்மா மீது ரேபரேலி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அந்த புகாரில், தனக்கோ அல்லது தனது குடும்பத்திற்கோ ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு சந்தன் வர்மாவே காரணம் என்று பூனம் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Read Entire Article