உத்தரபிரதேசம்: காசியாபாத் அருகே கேஸ் சிலிண்டர்கள் ஏற்றிச் சென்ற வாகனம் போபுரா சௌக் அருகே வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறும் காட்சிகள் 3 கி.மீ தூரத்திற்கு தெரிந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் உயிரிழப்பு குறித்து தகவல் கிடைக்கவில்லை.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே லாரி ஒன்று எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. இன்று அதிகாலையில் போபுரா சவுக் அருகே சென்ற போது திடீரென லாரி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறின. நாலாபுறமும் சிலிண்டர்கள் வெடித்து சிதறின.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் உள்ள வீடு, ஓட்டல் என நாலாபுறமும் சிலிண்டர்கள் வெடித்து பறந்தன. பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்து கண் விழித்தனர். மேலும் விபத்தை பார்த்து பெரும் பீதியடைந்தனர். சுமார் 3 கிமீ தூரத்துக்கு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதாக தெரிந்துள்ளது.
உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். சிலிண்டர்கள் ஒவ்வொன்றாக வெடித்து சிதறியதால் தீயணைப்பு துறையினரால் அருகே செல்ல முடியாத சூழல் இருந்தது. தொடர்ந்து தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்துகான காரணம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சிலிண்டர்கள் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை என்றும் கூறப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதிகாலையில் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமான சூழலும் நிலவியது.
The post உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே சிலிண்டர்கள் வெடித்து விபத்து appeared first on Dinakaran.