உதவி கேட்டு நாள் ஒன்றுக்கு 500 அழைப்புகள்; 10 நிமிடத்தில் விரைந்து சென்று பொதுமக்களுக்கு உதவி: சென்னை போலீசுக்கு பாராட்டுக்கள் குவிகிறது

6 hours ago 2

சென்னை: சென்னையில் உதவி கேட்டு நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகின்றனர். அந்த அழைப்புகளின் படி சம்பவ இடத்திற்கு 10 நிமிடங்களில் போலீசார் விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். போலீஸ் கமிஷனர் அருண் முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் குற்றங்கள் மற்றும் பல்வேறு உதவிகள் கேட்டு நாள் ஒன்றுக்கு சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு 500க்கும் மேற்பட்ட அழைப்புகள் வருகிறது. அந்த அழைப்புகளின் படி சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட போலீசாருக்கும் கமிஷனர் அருண் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அவசர அழைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றாலும், தாமதமாக சம்பவ இடத்திற்கு சென்றாலும் சம்பந்தபட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் எல்லையில் அவசர அழைப்புகன் வந்தால் சம்பந்தப்பட்ட போலீசார் 5 முதல் 10 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், முகப்பேர் பகுதியைச் சேர்ந்த ஜோதி(38) என்பவர் கடந்த 6ம் தேதி சென்னை பெருநகர காவல் அவசர அழைப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டு, ரேபிட்டோ செல்போன் செயலி மூலம் கால் டாக்ஸி புக் செய்து பயணம் செய்த 13 வயது மகனை பத்திரமாக வீட்டில் விடும்படி உதவி கேட்டார். உடனே கட்டுப்பாட்டறை போலீசார் கால் டாக்ஸி ஓட்டுநரை தொடர்பு கொண்டு புகார்தாரரின் மகனை பத்திரமாக விரைந்து வீட்டில் சேர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன் பேரில் சிறுவன் பத்திரமாக வீட்டில் சேர்க்கப்பட்டார்.

அதேபோல், பிராட்வே பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா(28) என்பவர், கடந்த 10ம் தேதி ஓலா ஆட்டோ புக் செய்து பயணம் செய்த போது சில ஆவணங்களை மறதியாக ஆட்டோவில் தவற விட்டு சென்றுள்ளார். உடனே கீர்த்தனா சென்னை பெருநகர காவல் அவசர அழைப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார். கட்டுப்பாட்டு அறை போலீசார் உடனே ஓலா ஆட்டோ ஓட்டுநரின் செல்போனில் தொடர்பு கொண்டு பயணி தவறவிட்ட ஆவணங்களை ஒப்படைக்குமாறு கூறியதின் பேரில் ஆட்டோ ஓட்டுநர் கீர்த்தனாவிடம் ஆவணங்களை பத்திரமாக ஒப்படைத்தார். சென்னை சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த சக்ரதாமி(23) என்பவர் கடந்த 11ம் தேதி ரேபிட்டோ பைக் புக் செய்து பயணம் செய்த போது, பைக் விபத்துக்குள்ளாகி, பயணி சக்ரதாமிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. சக்ரதாமி காவல் அவசர அழைப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்.

கட்டுப்பாட்டறை போலீசார் தேனாம்பேட்டை ரோந்து வாகனத்தில் பணியிலிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்து சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற ரோந்து போலீசார் சக்ரதாமியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து முதுலுதவி சிகிச்சையளித்து உதவி செய்தனர். அதேபோல்,ராயப்பேட்டை பகுதியில் ஊபர் நிறுவன டெலிவரி ஊழியர் மோகன்(38) என்பவர் கடந்த 13ம் தேதி இரவு 11 மணிக்கு ராயப்பேட்டையில் டெலிவரி செய்த போது லிப்ட்டில் சிக்கி கொண்டதாக அவசர அழைப்பு உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். கட்டுப்பாட்டறை போலீசார் விரைந்து செயல்பட்டு ராயப்பேட்டை ஜிப்சி ரோந்து வாகன போலீசாருக்கு தகவல் தெரிவத்துள்ளனர். ரோந்து போலீசார் சில நிமிடங்களில் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று லிப்ட்டில் சிக்கி தவித்த டெலிவரி ஊழியர் மோகனை பத்திரமாக மீட்டனர்.

இதுபோல் போலீஸ் கமிஷனரின் உத்தரவுக்கு இணங்க அவசர உதவி கேட்டு தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு சென்னை பெருநகர போலீசார் 10 நிமிடங்களில் நடவடிக்கை எடுத்து வருவதற்கு பொதுமக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தொடர்பு கொள்ளும் எண்கள் அறிவிப்பு
சென்னை பெருநகர காவல்துறை அவசர அழைப்புகளுக்கு பொதுமக்களின் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்து உதவி வருகின்றது. எனவே, அவசர அழைப்புகளுக்கு காவல் அவசர உதவி எண் 100, பெண்கள் உதவி மைய எண்: (1091), குழந்தைகள் உதவி மைய எண்:(1098), மூத்த குடிமக்கள் உதவி மைய எண்:(1253), பந்தம் திட்டத்தின் கீழ் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான உதவி எண்: (9499957575), காவல் ஆணையாளர் குறுஞ்செய்தி புகார்கள் அனுப்பும் எண்: (9500099100), மற்றும் வீடற்ற மற்றும் கைவிடப்பட்ட நபர்களை மீட்பதற்கான “காவல் கரங்கள்” உதவி எண்: (9444717100) மூலம் தொடர்பு கொண்டு பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

The post உதவி கேட்டு நாள் ஒன்றுக்கு 500 அழைப்புகள்; 10 நிமிடத்தில் விரைந்து சென்று பொதுமக்களுக்கு உதவி: சென்னை போலீசுக்கு பாராட்டுக்கள் குவிகிறது appeared first on Dinakaran.

Read Entire Article