உடுமலை: உடுமலை அருகே பஸ்சை தள்ளிய காட்டு யானையால் பஸ்சிற்குள்ளிருந்த 40 பயணிகள் பெரும் பீதியடைந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மூணாறு சாலையில் உடுமலை, அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. உடுமலை ஒன்பதாறு செக்போஸ்ட் முதல் சின்னாறு செக்போஸ்ட் இடைப்பட்ட வனப்பகுதியில் காட்டு யானைகள் அவ்வப்போது ரோட்டுக்கு வந்து நிற்பது வழக்கம். யானைகள் கூட்டம் கூட்டமாக அமராவதி அணைக்கு தண்ணீர் குடிக்க செல்லும். சில நேரங்களில் ஒற்றை யானை சாலையில் நீண்ட நேரம் நின்று வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும்.
இந்நிலையில், அதிகாலை 2 மணியளவில் கேரள மாநிலம் மறையூரில் இருந்து உடுமலைக்கு கேரள மாநில பஸ் ஒன்று வந்தது. அதில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். சின்னாறு அருகே வந்தபோது சாலையில் யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. இதை பார்த்ததும் பஸ் டிரைவர் இன்ஜினை ஆப் செய்துவிட்டார். ஆனால், பஸ்சுக்கு பின்னால் திடீரென வந்த யானை தந்தத்தை உயர்த்திக் கொண்டு, துதிக்கையால் பஸ்சை தள்ளியது. இதனால் பயணிகள் பீதியில் அலறினர்.
சில இளைஞர்கள் வெளியே தலையை நீட்டி யானையை செல்போனில் வீடியோ எடுத்தனர். . டிரைவர், கண்டக்டர் அவர்களை எச்சரித்தனர். பின்னர், பஸ்சை டிரைவர் இயக்கி நகர்த்தியதும் யானை சென்று விட்டது. அதன்பிறகே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். வனத்துறையினர் கூறுகையில், ‘‘வனச் சாலையில் செல்லும் போது யானைகள் தென்பட்டால் அதனை தொந்தரவு செய்யக்கூடாது. அமைதியாக இருந்தால் யானைகள் தானாகவே வனத்துக்குள் சென்றுவிடும்’’ என்றனர்.
The post உடுமலை அருகே பஸ்சை தள்ளிய காட்டு யானை: பயணிகள் பீதி appeared first on Dinakaran.