உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலை பட்டமளிப்பு விழா: இன்று நடக்கிறது

1 month ago 8

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா சென்னையில் இன்று நடக்கிறது. இதில் 3638 பேர் பட்டம் பெறுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக துணை வேந்தர் சுந்தர் கூறியதாவது: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் 14வது பட்டமளிப்பு விழா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்குகிறார். பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், முன்னாள் இந்திய பெண்கள் கூடைப்பந்து வீராங்கனை அனிதா பால்துரை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா பேருரையாற்றுகிறார். விழாவில் மொத்தம் 3638 மாணவ, மாணவியர் பட்டம் பெறுகிறார்கள். 62 பேர் நேரில் பட்டங்கள் பெறுகின்றனர்.

மீதமுள்ள 3576 பேர் அஞ்சல் மூலம் பட்டம் பெறுவார்கள். நேரில் பட்டம் பெறுவோரில் 25 பேர் ஆராய்ச்சிப் படிப்புக்காகவும், 37 பேர் இளநிலை, முதுநிலைப் பட்டங்களை பெறுகின்றனர். ஒவ்வொரு ஆண்டு் உடற்கல்வி பல்கலைக்கழகத்தில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர்.

ஆனால் விளையாட்டு துறை சார்ந்த பிற துறை படிப்புகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. அத்தகைய படிப்புகளில் சேர்வதற்கான அளவும் குறைவாகவே இருக்கிறது. விளையாட்டு துறை சார்ந்து படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறு துணை வேந்தர் சுந்தர் தெரிவித்தார்.

The post உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலை பட்டமளிப்பு விழா: இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Read Entire Article