பண்ருட்டி பலா உள்பட மேலும் 6 பொருளுக்கு புவிசார் குறியீடு

17 hours ago 4

சென்னை: கும்பகோணம் வெற்றிலை, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்கமாலைக்கு புவிசார் குறியீடு சமீபத்தில் கிடைத்தது. இந்நிலையில் பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், செட்டிகுளம் சின்ன வெங்காயம் மற்றும் ராமநாதபுரம் சித்திரைகார் அரிசி ஆகிய 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.

பண்ருட்டி பலாப்பழம் சுவையில் எப்போதும் சோடை போகாது. மலைப் பிரதேசத்தில் கிடைக்கும் தேன் பலாக்களைப் போன்ற சுவை பண்ருட்டி பலாவில் இருக்கிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். தமிழகத்தின் ‘லெமன் சிட்டி’ என்று தென்காசி மாவட்டம், புளியங்குடி அழைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு எலுமிச்சை உற்பத்தி இங்கு மிகவும் பிரபலமாக உள்ளது. அதேபோல, புவிசார் குறியீடு பெற்றதன் மூலம் பண்ருட்டி முந்திரி வணிகம் மேம்படவும், அயல்நாடுகளுக்கான ஏற்றுமதி அதிகரிக்கவும் நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘சித்திரைக்கார் என்பது ராமநாதபுரம் மாவட்டத்தின் பாரம்பரிய நெல் ரகம். இப்பகுதியில் சிவப்பு மட்டை, நொருங்கன் என்றும் இதனை அழைப்பர். இந்த நெல் ரகத்தில் கிடைக்கும் அரிசி அதிக நேரம் பசியை தாங்கக்கூடியது, அதிக ஊட்டச்சத்து உடையது, நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக உள்ளது’’ என்று கூறப்படுகிறது.

The post பண்ருட்டி பலா உள்பட மேலும் 6 பொருளுக்கு புவிசார் குறியீடு appeared first on Dinakaran.

Read Entire Article