சென்னை: “அரசியல் சாசன கடமைகளை ஆளுநருக்கு நினைவூட்டி, அவைகளை நிறைவேற்ற கால வரம்பு நிர்ணயித்திருப்பது அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அரணாகவே அமைந்திருக்கிறது. ஆனால், குடியரசுத் துணைத் தலைவர், உச்ச நீதிமன்றத்துக்கும், நீதித்துறைக்கும் எதிராகப் பேசியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது,” என்று அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது அரசியலமைப்புச் சட்டத்தின் படி, முடிவு எடுக்காமல், அவைகளை கிடப்பில் போடப்பட்டு, மக்கள் நலன்களை புறக்கணித்து வந்தார். தமிழக ஆளுநரின் அத்துமீறிய செயல்கள் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு, ஆளுநரின் அத்துமீறல்கள் மீது நியாயம் வழங்க கோரியது.