சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கிண்ணக்கொரை கிராமத்தில் பாரம்பரிய உணவகம்

7 hours ago 2

*கலெக்டர் திறந்து வைத்தார்

மஞ்சூர் : மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை கிராமத்தில் பாரம்பரிய உணவகத்தை கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு திறந்து வைத்தார்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கிண்ணக்கொரை. மஞ்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் தமிழக கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. தமிழகத்தின் கடைகோடி கிராமமாகவும் உள்ளது.

இந்நிலையில், மஞ்சூரில் இருந்து கிண்ணக்கொரை வரை குறிப்பாக மேல் குந்தா முதல் இரியசீகை வரை சாலையின் இரு புறங்களிலும் அடர்ந்த காடுகள், தேயிலைத்தோட்டங்கள் சூழ்ந்துள்ளது. மேலும், கோரகுந்தா ஜங்ஷன் பகுதியில் இருந்து கிண்ணக்கொரை வரை சாலையின் இரு புறங்களிலும் மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதுடன் கேரிங்டன் அருகே இருந்து பார்த்தால் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளும் தெளிவாக தெரியும்.

பச்சை பசேல் என காட்சியளிக்கும் மலைகளுக்கு நடுவே மேக கூட்டங்கள் தவழ்ந்து செல்லும் காட்சி ரம்யமாக காணப்படும். இதனால் கிண்ணக்கொரை பகுதிக்கு செல்வதில் சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக கேரளா சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாகவே கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் கிண்ணக்கொரை கிராமத்திற்குசென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.

இந்நிலையில், கிண்ணக்கொரை கிராமத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக அப்பகுதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாரம்பரிய உணவகம் அமைக்கப்பட்டது. கிண்ணக்கொரை பகுதியை சேர்ந்த ரோஜாவனம் மகளிர் சுய உதவிக்குழு கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த உணவகத்தை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு குத்து விளக்கு ஏற்றி வைத்து திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: மலைகளின் அரசியாம் நீலகிரி மாவட்டத்தில் குந்தா வட்டத்திற்கு உட்பட்ட மேல்குந்தா ஊராட்சியில் அமைந்துள்ள கிண்ணக்கொரை கிராமம் இயற்கை எழில் சூழ்ந்த ரம்மியமான கிராமம் ஆகும்.

இது நீலகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. சுற்றிலும் மலைகளையும் விண்ணை தொடும் மேகங்களையும் இந்த கிராமத்தில் கண்டு ரசிக்கலாம். இதன் காரணமாகவே கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் பெருமளவில் விடுமுறை தினங்களில் கிண்ணக்கொரை கிராமத்திற்கு வந்து செல்கின்றனர். கேரளா மட்டும் இன்றி தமிழகத்தில் இருந்தும் பெரும் அளவில் சுற்றுலா பயணிகள் இந்த கிராமத்திற்கு வந்து செல்கின்றனர்.

ஏற்கனவே, நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் பல்வேறு உணவு வகைகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்ட வருகின்றது.

அதன் ஒரு பகுதியாக, கிண்ணக்கொரை கிராமத்தில் சுற்றுலா பயணிகள் வருகை புரியும்போது அவர்களுக்கு தரமான மற்றும் சுவையான உணவு கிடைக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் இங்கு பாரம்பரிய உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த உணவகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கோரகுந்தா அருகில் உள்ள ஒன்னமந்து, நரிகுழிமந்து, கோழிமந்து ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்கு வசிக்கும் பழங்குடியினர் மக்களை சந்தித்து அவர்களிடம் அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களின் கலாச்சார முறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

கலெக்டருடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஊட்டி ஆர்டிஓ சதீஷ், மகளிர் திட்ட இயக்குனர் காசிநாதன், குந்தா தாசில்தார் சுமதி, ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், உதவி திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) ஜெயராணி மற்றும் மகளிர் சுய உதவி குழுவினர் அரசு துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கிண்ணக்கொரை கிராமத்தில் பாரம்பரிய உணவகம் appeared first on Dinakaran.

Read Entire Article