சென்னை: “நம்முடைய சமூக ஊடகப் படைதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று கூறுகின்றனர். நம்முடைய தகவல் தொழில்நுட்ப அணி என்றாலே நாகரிகத்துடனும், கண்ணியத்துடனும் இருப்பார்கள் என்று அனைவரும் கூற வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு அனைவருமே வேலை பாருங்கள்.” என்று தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
தவெக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் இன்று (ஏப்.19) நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம், காணொளியில் தோன்றி, அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது: நெட்வொர்க் பிரச்சினை காரணமாகத்தான், பதிவு செய்யப்பட்ட இந்த செய்தியை அனுப்புகிறேன். இதன் மூலமாக உங்கள் அனைவரையுமே சந்திப்பதில் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம். நம்முடைய இந்த சமூக ஊடகப் படைதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய படை என்று கூறுகின்றனர். இதை நாம் சொல்வதைவிட, மற்றவர்களே அதைப்பார்த்து தெரிந்து கொள்கின்றனர்.