‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் குறித்து சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் – எடப்பாடி இடையே காரசார விவாதம் நடைபெற்றது. ‘நல்லதே நடக்கும்’ என்று சபாநாயகர் தீர்ப்புக்கு பின் விவாதம் முடிவடைந்தது. தமிழக சட்டபேரவையில் நேற்று நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது திண்டுக்கல் சீனிவாசன் (அதிமுக) பேசும்போது, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் நிறைவேற்றப்படவில்லை, என்றார்.
அதற்கு பதிலளித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் கட்சி பாகுபடின்றி நடைபெறுகிறது. உறுப்பினர்கள் வழங்கிய பணிகளில் சாத்தியக்கூறு இல்லாத பணிகளுக்கு மாற்றாக வேறு பணிகளை வழங்கினால் அதனை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: மக்கள் சார்ந்த பிரச்னைகளை தான் உறுப்பினர்கள் கோரிக்கையாக வழங்குகிறார்கள். ஆனால், நிதி அதிகமாக இருப்பதாக கூறி நிராகரிக்கப்படுகிறது. என்னுடைய தொகுதியில் 10 திட்டங்களை வழங்கினேன். அவற்றில் இரண்டு தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமைச்சர் எ.வ.வேலு: சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கம் போல எனது தொகுதியில் கூட அரசு நிகழ்ச்சிகள் நடத்த சமுதாய கூடம் அமைக்க மனு வழங்கினேன். ஆனால் இடமில்லாத காரணத்தினால் மாற்று பணிகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளேன். சபாநாயகர் அப்பாவு: என்னுடைய தொகுதியில் கூட 440 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம் குறித்து கோரிக்கை மனு வழங்கியுள்ளேன். 10 கோரிக்கைகளில் 3, 4 கோரிக்கைகள் நிறைவேறுவது நல்ல முன்னேற்றம் தான். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: நாங்கள் கேட்பது ரூ.300, 400 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் அல்ல. பள்ளிக்கூடத்திற்கு கூடுதல் வகுப்பறைகள் தான். ரூ.2 கோடி, 3 கோடி மதிப்பிலான திட்டங்களை கூட நிராகரித்து விடுகிறார்கள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் 10 பணிகளை முன்னிலைப்படுத்தி வழங்கி, அதை நிறைவேற்றிடும் வகையில் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து இங்கு பொதுப்பணித்துறை அமைச்சர் விளக்கம் தந்திருக்கிறார். இருந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் இத்திட்டத்தில் மாற்றுப்பணியை தந்தாலும் அதுவும் சாத்தியமில்லை என்று தெரிய வருகிறது என்று சொல்லியிருக்கிறார். அது உண்மை தான், அதை நான் மறுக்கவில்லை.
இந்த திட்டத்தை பொறுத்தவரை, 2 மாதங்களுக்கு ஒருமுறை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். முதலமைச்சராகிய நானே அதை தலைமை தாங்கி ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். எனவே கட்சி பாகுபாடின்றி, இன்னும் சொல்ல வேண்டும் என்றால், 6 மாதத்திற்கு முன்பு எதிர்க்கட்சியை சார்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இந்த திட்டத்தில் நிறைவேற்றி தருவதற்கான பணிகள் குறித்த பட்டியல் எதுவும் தரவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டு அதற்குப்பிறகு தான் அவர் தந்தார். சாத்தியமில்லாத திட்டம் வரும்போது நிறைவேற்ற சாத்தியமில்லை என்ற பதில் வருகிறது. எனவே நிதிக்கு உட்பட்டு, சாத்தியப்படக்கூடிய திட்டங்கள் தான் நிறைவேற்ற முடியும். அந்த பணிகளை நிறைவேற்றி கொண்டிருக்கிறோம். பள்ளிக்கூடத்திற்கான கட்டிடங்கள் பற்றி எதிர்க்கட்சி தலைவர் சொன்னார். இது அந்த துறையின் சார்பில் நிறைவேற்றப்படுகிறது. எனவே, எந்த கட்சி பாகுபாடின்றி இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி: நிதி அதிகம் எனக்கூறி நிராகரிக்கப்படுகிறது. சாத்தியமில்லை எனக்கூறி வேறு ஒரு பணியை பரிந்துரைக்க சொல்கிறீர்கள். வேறு ஒரு பணியை வழங்கினால் அதனையும் நிராகரிக்கிறீர்கள்.
சபாநாயகர் அப்பாவு: நல்லெண்ண அடிப்படையில் கொண்டு வந்தது இந்த திட்டம், நல்லதே நடக்கும்.
பேரவையில் இன்று…
தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியதும், கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதைத்தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலன், பால்வளத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். இதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். விவாதத்துக்கு வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் பதில் அளித்து பேசி, அவர்களது துறைக்கான பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிடுவார்கள். இதையடுத்து வாக்கெடுப்பு மூலம் மானிய கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்படும்.
The post ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டம்; கட்சி பாகுபாடு இன்றி நிறைவேற்றப்படுகிறது: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் appeared first on Dinakaran.