![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/09/38417795-omar.gif)
ஸ்ரீநகர்,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. இந்த சூழலில் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே, பா.ஜ.க. பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்தது.
மற்றொரு முக்கிய கட்சியான காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெற முடியவில்லை. வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜ.க. 48 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெல்லி மாநில ஆட்சியை 27 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜனதா கைப்பற்றியது.
இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து ஆம்ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சியை காஷ்மீர் முதல்-மந்திரியும், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிப்பவருமான உமர் அப்துல்லா கிண்டல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "உங்களுக்குள் இன்னும் கொஞ்சம் சண்டையிட்டுக் கொள்ளுங்கள்" என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு பிரபலமான வீடியோ மீம்சையும் பகிர்ந்துள்ளார். அதில், " உங்கள் விருப்பப்படி சண்டையிட்டுக் கொள்ளுங்கள். ஒருவரை ஒருவர் தோல்வியுற செய்யுங்கள்." என்று கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்குள் அதிகரித்து வரும் பதற்றத்துக்கு இடையில் உமர் அப்துல்லா இவ்வாறு தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு கூட்டணிகளுக்கு இடையே செயல்படாத தன்மை மற்றும் ஒற்றுமையின்மையை அவர் வெளிப்படையாக சாடியுள்ளார்.