
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். ஏற்கனவே சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடை பெற்ற அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். இதனால் அவருக்கு பல தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி உடனான நட்பு குறித்து அவரது சிறுவயது நண்பரும் இந்திய முன்னாள் வீரருமான இஷாந்த் சர்மா சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "வெளியில் இருப்பவர்களுக்கு விராட் கோலி ஒரு நட்சத்திரம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் என்னால் அவரை அப்படி பார்க்க முடியாது. ஏனெனில் நாங்கள் யு-17 கிரிக்கெட் (17- வயதுக்குட்பட்டோர்) முதல் ஒன்றாக விளையாடி வருகிறோம். அவர் என்னுடைய பால்ய நண்பர். யு-19 அளவில் விளையாடியபோது நாங்கள் எவ்வளவு பணம் வைத்திருக்கிறோம் என்று எண்ணுவோம். அதை வைத்து சாப்பிடுவோம். விராட் கோலி மற்றவர்களுக்கு ஒரு மாதிரியானவர். ஆனால் எனக்கு வித்தியாசமானவர்.
உங்களுடைய சகோதரர் பெரிய உச்சத்தை தொட்டு விட்டதாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்போது எல்லோரும் அவர் சிறந்தவர் என்று நினைப்பார்கள். ஆனால் நாளின் இறுதியில் அவர் அவர் ஒரு மனிதர் என்பதை நீங்கள் காண்பீர்கள். அவருடன் நீங்கள் நிறைய நேரத்தை செலவிட்டுள்ளீர்கள். எனவே அவரைப் பற்றி எல்லாமே உங்களுக்கு தெரியும். அவர் எங்கிருந்து வந்தார், எப்படி இருக்கிறார் என அனைத்தும் உங்களுக்கு தெரியும்.
இப்போதெல்லாம் நாங்கள் சந்திக்கும்போது கிரிக்கெட் குறித்து பேச மாட்டோம். மாறாக வேடிக்கையான நகைச்சுவைகளை பேசுவோம். அதையும் இதையும் பேசி ஜாலியாக சிரிப்போம். அதனால் அவரை விராட் கோலி என்று நான் எப்போதும் கருத மாட்டேன். உங்களுக்குதான் அவர் விராட் கோலி. எனக்கு அவன் சீக்கு. அப்படித்தான் நான் அவரைப் பார்க்கிறேன். அவரும் என்னை அப்படித்தான் பார்ப்பார்.
சிறுவயதில் நாங்கள் ஒன்றாக ஒரே அறையில் தங்கி தூங்கி வளர்ந்தோம். விராட் கோலிக்கு முன்பாகவே இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது என்னை உதைத்த அவர், 'உண்மையாகவே நீ எல்லாம் இந்தியாவுக்கு விளையாடப் போகிறாயா?' என்று கேட்டார். அதற்கு நண்பா முதலில் என்னை தூங்க விடு என்று சொன்னேன்" என கூறினார்.