
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரஞ்சி, விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். மும்பை அணியின் நட்சத்திரமாக அறியப்பட்ட 23 வயதான ஜெய்ஸ்வால் திடீரென மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாறுவதற்கு முடிவு எடுத்து, மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் அனுமதி கேட்டார். அவர்களும் அவர் கோவா அணியில் ஆடுவதற்கு ஒப்புக் கொண்டனர்.
இவர் விலகுவதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் மும்பை அணியின் மூத்த வீரரான ரகானேவுடன் ஏற்பட்ட மோதல்தான் முக்கிய காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஜெயஸ்வால் இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "அவர் (ஜெய்ஸ்வால்) ரஞ்சி டிராபியில் விளையாடுவதை எதிர்பார்க்கக்கூடாது. அவரைப் போன்ற ஒரு வீரர் 3 வடிவங்களிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) இந்தியாவுக்காக விளையாட வேண்டும். அதில்தான் அவரது கவனம் இருக்க வேண்டும்.
கோவா அவருக்கு என்ன வழங்கினாலும் பரவாயில்லை. நீங்கள் மும்பையை விட்டு வெளியேற வேண்டாம். உங்களுக்கு 34-35 வயதான பின்னர் வெளியேறினால் அது பரவாயில்லை. ஆனால் இந்த வயதில் வேண்டாம்" என்று கூறினார்.