நன்றி குங்குமம் டாக்டர்
குழந்தைகள் என்றாலே சுட்டித்தனம்தான். அதிலும் சில குழந்தைகள் வீட்டையே ரெண்டாக்கிவிடுவார்கள். அவர்கள் செய்யும் குறும்பையும் சேட்டையையும் ரகசியமாய் ரசித்துக்கொண்டே சலித்துக்கொள்ளும் தாய்மார்கள்கூட அவர்கள் சாப்பிடாமல் அடம்பிடிக்கும்போது வருந்தாமல் இருக்கமாட்டார்கள்.
‘என் குழந்தை சரியாவே சாப்பிடுறதில்லை; ரொம்ப அடம் பண்ணுது’ என்பதே இன்று பல பெற்றோர்களின் கவலையாக இருக்கிறது. இதைத் தவிர்க்கவும், குழந்தைகள் மகிழ்ச்சியாக சாப்பிடவும் எளிமையான வழிமுறைகள் உள்ளன. அவை என்னென்ன என்று பார்ப்போம்.“முன்பெல்லாம் கூட்டுக்குடும்பமாக பலரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். அந்த மகிழ்ச்சியான சூழலில், ஒரு தட்டில் உருட்டிவைத்த சாப்பாட்டு உருண்டைகளை தாங்களே எடுத்துச் சாப்பிட, குழந்தைகளைப் பழக்கப்படுத்தியிருப்பார்கள். இதுதான் ஆரோக்கியமான வழிமுறை. இன்றைய நியூக்ளியர் குடும்பச்சூழலில், கணவன், மனைவி, குழந்தை ஆகியோர் பெரும்பாலும் தனித்தனியேதான் சாப்பிடுகின்றனர். இதனால்கூட, சாப்பாட்டு விஷயத்தில் குழந்தைகளுக்கு ஆர்வம் குறையலாம். எனவே, குறைந்தபட்சம் ஒருவேளை உணவாவது குடும்பமாக உட்கார்ந்து சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
ஒன்றரை முதல் இரண்டு வயது வரை மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டிவிட வேண்டும். பிறகு அவர்களாகவே சாப்பிடப் பழக்கப்படுத்த வேண்டும். அப்போது குழந்தைகள் அடம்பிடித்தால் நான்கைந்து வாய் ஊட்டிவிடலாமே தவிர, முழுமையாக நாமே ஊட்டிவிடக் கூடாது. அப்போதுதான் குழந்தைகள் தங்கள் பசிக்குப் பிறரை எதிர்பார்க்காமல், தாங்களே சாப்பிடுவார்கள். குழந்தைக்கு மணிக் கணக்கில் சாப்பாடு ஊட்டிவிடுவது தவறு.
‘ஒழுங்கா சாப்பிட்டா சாக்லேட் தர்றேன்; செல்போன் தர்றேன்’ எனச் சொல்வதும் தவறு. சாப்பாட்டு விஷயத்தில் அதிகச் செல்லம் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால்தான், குழந்தைகள் மேற்கொண்டு சாப்பிடாமல் அடம்பிடிப்பார்கள். குழந்தைகள் தங்கள் பசிக்கு ஏற்பச் சாப்பிடட்டும். சாப்பிடாமல் அடம்பிடித்தால், அமைதியாக அவர்களின் போக்கில் விட்டுவிடுங்கள். பசியெடுத்தால், தானாகச் சாப்பிட வருவார்கள். `அடம்பிடிப்பது பயன் தராது’ என்ற எண்ணம் குழந்தைகளின் மனதில் நன்கு பதிய வேண்டும்.
குழந்தைகளுக்கு அடிக்கடி எதையாவது சாப்பிடக் கொடுத்துக்கொண்டே இருக்கக் கூடாது. கேட்ஜெட்டுகளில் விளையாடுவதை ஊக்கப்படுத்தாமல், குழந்தைகளை ஓடியாடி விளையாடவிட வேண்டும். அதனால் இயல்பாகவே அவர்களுக்குப் பசியெடுத்துவிடும்.
ஆரோக்கியமான உணவு, பழங்கள் என எதுவானாலும் முதலில் அதைச் சாப்பிட்டுத் துப்பினாலோ அல்லது வாந்தி எடுத்தாலோ உடனே, ‘இது குழந்தைக்குப் பிடிக்காது/சேராது’ என்று நினைக்கக்கூடாது. அது அன்றையச் சூழல் மட்டுமே. அடுத்த நாள் பழத்தை ஜூஸ் அல்லது சாலட் என மாற்று வழிகளில் கொடுத்துச் சாப்பிடப் பழக்க வேண்டும்.
குழந்தைகள் எப்போதும் புதுமையை, வண்ணமயமான விஷயங்களை அதிகம் விரும்புவார்கள். எனவே, தினமும் வழக்கமான முறையில் இட்லி செய்வதைத் தவிர்த்து, மாற்று வடிவங்களில் செய்து கொடுக்கலாம். ஏ, பி, சி, டி வடிவங்களில் தோசை செய்து கொடுக்கலாம். பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளின் இயற்கைச் சாற்றை உணவுகளில் சேர்த்து வண்ணமயமாக்கிக் கொடுக்கலாம்.
பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் நேரம்தான் குழந்தைகளுக்கு அதிகமாகப் பசி இருக்கும். அப்போது பெரும்பாலான பெற்றோர்கள், காபி, டீ, பிஸ்கட், பிரெட் என்று கொடுப்பார்கள். இது தவறு. அப்போது சாதம், பொரியல் அல்லது டிபன் வகைகள் என ஹெவி உணவாகக் கொடுக்க வேண்டும். பிறகு சில மணி நேரம் கழித்து பால்/டீ/காபி கொடுக்கலாம்.
பெரியவர்கள் எதிர்பார்க்கும் அளவு சாப்பாட்டைக் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்குத் தேவையான அளவே சாப்பிடுவார்கள். `போதும் மம்மி’ என்றால் விட்டு விடலாம். மீண்டும் பசித்தால் தானாகவே வந்து சாப்பிடப் பழக்கவும். மாறாக, `முழுசா சாப்பிட்டுத்தான் ஆகணும்’ எனத் திட்டுவது, அடிப்பது, மற்றொரு குழந்தையுடன் ஒப்பிடுவது போன்ற செயல்களால், குழந்தைகளுக்குச் சாப்பாட்டின் மீது வெறுப்புதான் வரும்.’’
நமக்கே நாக்குக்குப் பிடிக்காததைச் சாப்பிட இயலாது. நம் குழந்தைகளுக்கு மட்டும் எப்படிப் பிடிக்கும். ஹெல்த்தியான உணவுகளைவிடவும் ருசியான உணவுகளையே மனம் நாடும். எனவே, ஹெல்த்தியான உணவுகளை ருசியாக, சாப்பிட ஆர்வம் ஏற்படும் வகையில் எப்படித் தரலாம் என்பதைக் கண்டறியுங்கள். கலர், வடிவம், லுக்கான தோற்றம், ருசியூட்டும் வகை ஆகியவற்றை குழந்தைகளுக்குப் பிடித்தது போல் ஆரோக்கியமானவற்றைச் செய்து தரலாம்.
குழந்தைகள் கேட்கிறார்கள் என்று ஜங்க் ஃபுட்ஸ், ப்ராசஸ்டு ஃபுட்ஸ், செயற்கையான பானங்கள், கோலா போன்றவற்றை வாங்கித் தராதீர்கள். இவை அவர்களை நாக்குக்கு அடிமையாக்கி ஆரோக்கியமானவற்றைத் தேடுவதைக் குறைத்துவிடும். சாக்லெட், ஐஸ்க்ரீம் போன்றவற்றை அவர்களை ஊக்கப்படுத்த எப்போதாவது வாங்கித் தரலாம். அதாவது, அவர்கள் ஒரு செயல் செய்யும்போது பாராட்டவோ, பரிசளிக்கவோ அவற்றை வாங்கித் தரலாம். எப்போதும் வாங்கித் தரக்கூடாது. நம் குழந்தைதானே என்று அதீத பாசத்தில் குழந்தைகளின் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை சிதைக்காதீர்கள்.
தொகுப்பு: சரஸ்
The post உங்க பாப்பா சாப்பிட அடம்பிடிக்குதா? appeared first on Dinakaran.