சென்னை: “அதி நவீன கார்ப்பரேட் ஈஷா அறக்கட்டளை ஆசிரமம், பழங்குடி மக்கள் மற்றும் அவர்களுடைய நிலங்களையும், அரசின் நிலங்களையும் ஆக்கிரமித்துள்ள புகார்கள் மீது அரசு தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்ற வினாவுக்கு வெளிப்படையான விடை அளிக்க வேண்டும்.மர்மங்கள் நிறைந்த மந்திர தேசமாக விளங்கும் ஈஷா அறக்கட்டளை ஆசிரமத்தின் மீதான குற்றவியல் மற்றும் உரிமையியல் புகார்களை முழுமையாக விசாரித்து, உண்மை நிலவரத்தை நாட்டுக்கும், மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா அறக்கட்டளை ஆசிரமம் குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து வருகின்றன. அண்மையில் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் எஸ்.காமராஜ் தனது இரண்டு மகள்கள் ஈஷா ஆசிரமம் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களை ஈஷா ஆசிரமத்தில் மூளை சலவை செய்து, மயக்கி அடைத்து வைத்துள்ளார். அவர்களை மீட்டுத் தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.