ஈரோடு: ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த மாஜி கண்டக்டரை பிளேடால் கழுத்தை அறுத்து கொள்ளையடிக்க முயற்சி செய்து தப்பி ஓட முயன்ற மேற்கு வங்க வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (70). தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ஜெயலட்சுமி. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், கொள்ளை அடிக்க திட்டமிட்டு சுப்பிரமணியின் வீட்டிற்குள் நுழைந்து,சுப்பிரமணியின் கழுத்தை பிளேடால் அறுத்து கொல்ல முயன்றார்.
இதனை கண்ட ஜெயலட்சுமி சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதை பார்த்து அந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி சென்றார். உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்த பொதுமக்கள் கொள்ளையனை விரட்டி பிடித்து, கட்டி போட்டு தர்ம அடி கொடுத்தனர். ரத்த வெள்ளத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் இருந்த சுப்பிரமணியை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு தெற்கு போலீசார் விசாரணை நடத்தி, பொதுமக்கள் கட்டி வைத்திருந்த கொள்ளையனை மீட்டு காயமடைந்திருந்த அவனை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அந்த கொள்ளையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கொள்ளையன் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சோமஓரான் மகன் ராபி ஓரான் (28) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஈரோட்டில் வீடு புகுந்து கண்டக்டர் கழுத்தை அறுத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் அடித்துக்கொலை: பொதுமக்கள் கட்டி வைத்து தாக்கியதில் உயிரிழப்பு appeared first on Dinakaran.