ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் போதிய பருவமழை இல்லை என்பதாலும், கோடை வெயில் கொளுத்தி வருவதாலும், கடும் வறட்சி ஏற்பட்டு பல்வேறு இடங்களில் தென்னை மரங்கள் காய்ந்து வருவது விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கிராம பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு வாழ்வாதாரமாக தென்னை மரங்கள் உள்ளன. தென்னையில் இருந்து பெறப்படும் தேங்காய், இளநீரை விற்பதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைத்து வந்தது.
இதுதவிர, தென்னை ஓலைகள் குடிசைக்களுக்கான கீற்று முடைவதற்கு அனுப்பி வைப்பதாலும், தேங்காய் மட்டைகள் கயிறு திரிக்கப் பயன்படுத்துவதாலும், அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட வருமானம் விவசாயிகளுக்கு கிடைத்தது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தி வருவதால் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கடும் வறட்சியும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இதனால், விவசாயத்திற்கு போதிய நீராதாரம் இல்லை. இதன் காரணமாக, மொடக்குறிச்சி, அறச்சலூர், திண்டல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை மரங்கள் காய்ந்து விட்டன.
தென்னந்தோப்புகளில் பெரும்பாலான மரங்கள் காய்ந்து மொட்டையாக காட்சி அளிக்கிறது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: கோடை வெப்பம் மற்றும் கடும் வறட்சியால், குலை தள்ள வேண்டிய தென்னை மரங்கள் காய்ந்துள்ளன. அவற்றை பாதுகாக்க நீரை விலைக்கு வாங்கி ஊற்ற வேண்டியுள்ளது. குறைந்தளவில் மரங்களை பராமரித்து வரும் சிறு விவசாயிகளால், மரங்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அக்னி நட்சத்திரத்திற்கு பிறகு மேலும் தென்னை மரங்கள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post ஈரோட்டில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் காய்ந்து வரும் தென்னை மரங்கள்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.