ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடுவீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் திமுக சார்பில் விசி.சந்திரகுமார், நாதக சார்பில் சீதாலட்சுமி உள்பட 46 பேர் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில், 209 முதியோர்கள், 47 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 256 பேர் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பப் படிவம் வழங்கி இருந்த நிலையில், அவர்களிடம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
இதையடுத்து வாக்குப் பதிவு மையங்கள், வாக்கு எண்ணிக்கை மையங்களை தயார் செய்யும் பணியில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குப் பெட்டிகள் வைப்பதற்கான அறை, பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறைகளை சரி செய்யும் பணியும் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில், வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். பூத் சிலிப் வழங்கும் பணி பிப்ரவரி 1ம் தேதிக்குள் முடிவடையும் என தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. ஊழியர்கள் வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.