ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி அறிவிப்பு: கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி

3 weeks ago 5

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால் அக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதிமுக எடப்பாடி கட்டுப்பாட்டில் முழுமையாக வந்தாலும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் என இதுவரை நடந்த 10 தேர்தலிலும் தோல்வி அடைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா களமிறக்கப்பட்டு வெற்றி வாகை சூடினார். இதன் பின்னர், கடந்த 2023ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததை தொடர்ந்து இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில், திருமகன் ஈவெரா தந்தையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிட அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட 77 பேர் களம் இறங்கினர். இதில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1.10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்தாண்டு டிசம்பர் 14ம் தேதி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உயிரிழந்தார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ம் தேதிநடக்கும் என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியிட திமுக தரப்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை நடந்தது. கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக, ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை அதிமுக கூட்டணிக்கு கடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல், 2023 இடைத்தேர்தல் மூலம் வாக்கு சதவீதம் குறைந்து வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

அதேபோல் சட்டமன்ற தேர்தல் வர ஓராண்டே உள்ள நிலையில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியை சந்திப்பதைவிட புறக்கணிப்பது நல்லது என மூத்த தலைவர்கள் சிலர் எடப்பாடிக்கு அறிவுரை கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என அதிமுக முடிவு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கூட்டம் முடிந்த பிறகு எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: பணபலம், படைபலத்துடன் தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதால், 5.2.2025 அன்று நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி அறிவிப்பு: கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article