ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
முன்னதாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையின் முடிவில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வி.சி.சந்திர குமார் 197 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி 13 வாக்குகள் பெற்றார். நோட்டாவுக்கு 18 வாக்குகள் கிடைத்தது.
இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளி நோட்டா 2-ம் இடத்தைப் பிடித்தது.
முன்னதாக எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தன. அந்தந்த கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தலை புறக்கணிக்கும் விதத்தில் நோட்டாவுக்கு வாக்குகளை செலுத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.