சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றி என்பது, தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் சாதனைக்கு கிடைத்த பரிசு என்று கூட்டணி கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: ஈரோடு கிழக்கில் திமுக அமோக வெற்றி பெற்றிருக்கிறது. இது மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிற ஆட்சியின் சாதனைகளுக்கு கிடைத்த பரிசு. வகுப்புவாத, பிரிவினைவாத சீர்குலைவு சக்திகளுக்கு பாடம் கற்பிக்கின்ற வகையில் இந்த வெற்றி அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் சமீபகாலமாக மதநல்லிணக்கத்தையும், சமூகநீதியையும் சீர்குலைக்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கிற பிற்போக்கு சக்திகளுக்கு ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் முடிவு உரிய பாடத்தை வழங்கியிருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெற்ற வெற்றி 2026 சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி பெறப் போகின்ற வெற்றிக்கு அச்சாரமாக அமைய இருக்கிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவு : அடுத்து வரும் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வரலாறு காணாத வெற்றி பெறும் என்பதற்கான முன்னறிவிப்பைத் தந்துள்ளது. அநாகரீக அரசியலை முன்னெடுத்த நாம் தமிழர் கட்சியின், சங் பரிவார் கும்பலுக்குரிய வெறுப்பு அரசியலை ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் முற்றாக நிராகரித்திருக்கிறார்கள்.
அடுத்த ஆண்டு (2026) நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறப்போகும் வரலாறு காணாத வெற்றிக்கு கட்டியம் கூறியுள்ள ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கும், கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட்ட தலைவர்கள், அமைச்சர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நன்றி பாராட்டி, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார்: ஈரோடு கிழக்கு தொகுதி வெற்றி என்பது தமிழ்நாட்டில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான அணி வெற்றி பெற்று, மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்பதற்கான அறிவிப்பு இந்த இடைத்தேர்தல் முடிவாகும்.
தேர்தல் பிரசாரத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் எவரும் கலந்து கொள்ளாத நிலையில் நடைபெற்ற இந்த தேர்தல் முடிவு தான் உண்மையான மக்களின் மன நிலைப்பாடாகும். எதிரிகளே இல்லாத களத்தில் வெற்றி பெறுவது இயல்பு தானே என சிலர் கேட்கக்கூடும். எதிரிகள் இல்லை என்றாலும் திமுக அரசின் மீது அதிருப்தி இருந்தால் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். இவ்வளவு வாக்குகளை உதயசூரியனுக்கு அளித்திருப்பது முதல்வர் தலைமையிலான திமுக அரசின் திட்டங்கள் மக்களை சேர்ந்திருக்கிறது. மக்கள் இந்த அரசு நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை தான் காட்டுகிறது.
The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வெற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியின் சாதனைக்கு கிடைத்த பரிசு: செல்வப்பெருந்தகை, முத்தரசன், பொன்குமார் வாழ்த்து appeared first on Dinakaran.