ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பால் கொதிக்கும் இலைக்கட்சி தொண்டர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

4 hours ago 2

‘‘கடைகோடி மாவட்டத்தை ரெண்டாக பிரித்து தலைவர் தேர்வு நடந்துக்கிட்டு இருக்கும்போதே குறிப்பிட்ட வாக்குவங்கி பிரிவினர் கடும் அதிருப்தியை தெரிவிக்க ஆரம்பிச்சிட்டாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தாமரை கட்சியில் மவுண்ட் தலைவரின் ஆலோசனைப்படி கடைகோடி மாவட்டத்தை இரண்டாக பிரித்துள்ளார்களாம்.. கிழக்கு என்றும், மேற்கு என்றும் பிரிக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கு தலைவர் தேர்வு தீவிரமாக நடந்துகிட்டு வருகிறதாம்.. இதில் கோல்டு தலைவரின் ஆலோசனைப்படிதான் மாவட்ட தலைவரை தேர்வு செய்கிறார்களாம்.. அதில் அரசல் புரசலாக தலைவர்கள் யார் என்று தகவல் கசிந்திருக்கிறதாம்.. இதை தெரிந்துகொண்ட குறிப்பிட்ட வாக்குவங்கி பிரிவினர் கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்.. இந்த முறையும் தங்களுக்கு பிரதிநிதித்துவம் தராமல் இருந்தால் எப்படி என்று கேள்வி எழுப்புகிறார்களாம்.. இதனை சமூக வலைதளங்களிலும் குறையாக பதிவிட்டு வர்றாங்களாம்.. ஆனால், எல்லாம் கோல்டு தலைவரின் கையில்தான் இருக்கிறது என 2ம்கட்ட தலைவர்கள் கூறுவதால் மற்றவர்கள் கையை பிசைந்து வருகின்றனராம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கடத்தல்காரர்களிடம் வசூலில் ஈடுபட்ட பெண் காக்கி அதிரடி மாற்றம் செய்யப்பட்டது தெரியுமா?’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல ரேஷன் ரைஸ் கடத்தல் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக புட் செல் பிரிவு இயங்கி வருது.. இங்க பெண் ஸ்டார் காக்கி பணிபுரிஞ்சு வந்தாரு.. இவர் மேல ஏற்கனவே பல புகார்கள் எழுந்து வந்ததாம்.. ரெய்டுன்ற பெயர்ல, சோதனை நடத்தி கடத்தல்கார்களிடமே வசூல் வேட்டை நடத்தி வந்தாராம்.. தேவைப்பட்டா மட்டும் தான் வழக்கு பதிவு செய்வாராம்.. இப்படித்தான் சில வாரங்களுக்கு முன்னாடி நியூ பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல தள்ளுவண்டி கடை வெச்சிருக்குற நபர், வீட்டுக்கான சிலிண்டரை பயன்படுத்தியது தெரியவந்துச்சு.. அந்த சிலிண்டரையும் தூக்கி போட்டுக் கொண்டு போயிட்டாங்களாம்.. அப்புறம் சில நாள் கழித்து பெண் காக்கி, போன் போட்டு உன் மேல கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன். நீ உடனே வாட்ஸ் அப் கால்ல வா? என்று கூறி போனை துண்டித்துவிட்டாராம்.. இதையடுத்து அந்த கடைக்காரர் வாட்ஸ் அப் காலில் பேசியுள்ளார். அப்போது 10 கே கொண்டு வா? நான் சொல்லும் நபர்கிட்ட கொடுத்து விடு. இல்லைன்னா ஜெயில் தான்னு மிரட்டியிருக்காரு.. இந்த புகார் சென்னை உயர் அதிகாரிகள் காதுக்கு போகவே, விசாரிச்சு, இரவோடு இரவாக பெண் காக்கியை அந்த டிபார்ட்மெண்ட விட்டே மாற்றியிருக்காங்க.. புட் செல் பிரிவுக்கு தனி டிஎஸ்பி முன்னாடி இருந்தாரு.. அந்த பணியிடம் காலியாக உள்ளது. இதனால இருக்குற மற்ற ஸ்டார் காக்கிகள் எல்லாருமே நானே ராஜா, நானே மந்திரி என்ற மாதிரி செயல்படுறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரெண்டு ஆண்டு கடந்தும் புல்லட்சாமியின் அறிவிப்பில் ஒன்றையும் காணவில்லையே என புலம்பித் தவிக்கிறாங்களாமே மக்கள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி பிராந்தியங்களில் ஒன்றான காரை பெயர் கொண்ட பகுதி தமிழகத்திற்குள் இருக்கு.. அவ்வப்போது அங்கு விசிட் அடிக்கும் புல்லட்சாமி வாக்குறுதிகளை அள்ளி வீசுவாராம்.. கடந்த கார்னிவெல் திருவிழாவில் பங்கேற்று பேசிய புல்லட்சாமி, அப்பகுதிக்கென அரசு மருத்துவக்கல்லூரி, ஆயுஷ் மருத்துவமனை, அடுக்குமாடி கட்டிடங்கள் என சுகாதாரத்துறை தொடர்பான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டாராம்.. அதற்கு ஒன்றிய அரசின் ஒப்புதலும் கிடைத்ததாக தொிவித்திருந்தாராம்.. ஆண்டுகள் 2 கடந்து அடுத்த கார்னிவெல் விழாவும் வரப்போகிறதாம்.. விழிப்படைந்த மக்கள், கடந்த அறிவிப்புகளில் ஒன்றைக்கூட காண முடியவில்லையே, எங்கு தேடியும் கிடைக்கவில்லையே என்று புலம்பி வருகிறார்களாம்.. இந்த முறையும் புல்லட்சாமி ஏதாவது வாய்சவாடல் விடுகிறாரா என பார்ப்போம் என காத்திருக்கிறார்களாம்.. ஏமாறும் வரை ஏமாற்றுவார்கள்தான்… என்ற கொந்தளிப்பை புலம்பலாக அப்பகுதிகளில் கேட்க முடிகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தொடர் தோல்வியை மறைக்கவும், சுய நலத்திற்காகவும் கட்சியை கொண்டு போவதாக இலைக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புலம்புறாங்களாமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஈரோடு கிழக்கு தொகுதி எலக்சனை இலை கட்சி தலைமை புறக்கணிச்சது உள்ளூர் நிர்வாகிகளிடையேயும் தொண்டர்களிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்காம்.. எலக்சனில் வெற்றி, தோல்வி சகஜம்தான். அதுக்காக தொடர்ந்து எலக்சனை புறக்கணிச்சிட்டே போனா எப்படி கட்சி வளரும்னு உள்ளூரில் இருக்கிற முக்கிய நிர்வாகிங்க கிட்ட கேள்வி கேட்க தொடங்கி இருக்காங்களாம்.. ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு எலக்சனிலும் இலைக்கு மட்டுமே ஓட்டுபோட்ட நாங்க வாக்குப்பதிவு நாளில் யாருக்கு போய் ஓட்டு போடறதுன்னு உள்ளூர் மாவட்ட நிர்வாகி கிட்ட புலம்பிக்கிட்டு இருக்கிறாங்களாம்.. கட்சி தலைமை தன்னோடு தொடர் தோல்வியை மறைக்கவும், சுயநலத்திற்காகவும் இப்படி கட்சியை கொண்டு போனா கூடிய சீக்கிரம் கட்சி கரைஞ்சு போயிடும்னு தொண்டர்கள் வெளிப்படையாவே பேசத்தொடங்கிட்டாங்களாம்.. குறைஞ்ச பட்சம் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு கூட முன்வராம போட்டியே வேண்டாம்னு வெறும் களத்தில் கம்பு சுத்தி என்ன பயன்னு இலைக்கட்சி தொண்டர்களின் கொதிநிலை நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டு வருதாம்.. இலை கட்சியோடு நிலை இப்படி இருக்க, பூ கட்சியில மாவட்ட அளவில சில நிர்வாகிங்களுக்கு எலக்சன் புறக்கணிப்பு வருத்தத்தை ஏற்படுத்தி இருக்காம்.. மாவட்ட நிர்வாகிங்க சிலர் எலக்சனை வெச்சு கலெக்சன் அள்ளிடலாம்னு கனவுல மிதந்துகிட்டு இருந்தாங்களாம்.. ஆனா பூ கட்சி தலைவரு தன்னோட பதவிய தக்க வைக்கிறதுல மட்டும் கவனம் செலுத்திகிட்டு தங்களோட கனவை கலைச்சிட்டாருன்னு வருத்தத்துல இருக்கிறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post ஈரோடு இடைத்தேர்தல் புறக்கணிப்பால் கொதிக்கும் இலைக்கட்சி தொண்டர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article