டெல்லி: ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்கின்றனர். இஸ்ரேல்- ஈரான் இடையிலான போர் பதற்றம், லெபனான், சிரியா வரை விரிவடைந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட மேற்கு ஆசியா முழுவதுமே போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு கூட்டம் நேற்று அவசரமாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில், மேற்கு ஆசியாவில் உள்ள பதற்றம், வர்த்தகம் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்தில் ஏற்படும் பாதிப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்மையில் இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா தலைவரை வான்வெளி தாக்குதல் நடத்தி கொலை செய்தது. இதற்குப் பதிலடியாக ஈரான் நேரடியாக கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்குதல் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி அதிர வைத்தது. ஆனால் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை, அமெரிக்கா தடுத்து நிறுத்தி நடுவானிலேயே வெடிக்க வைத்து, பெரும் பாதிப்பை தடுத்தது. எனினும் போர் பதற்றம் அதிகமாக உள்ளது. தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் எண்ணெய் ஆலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து விவாதித்து வருகிறது. இதுபற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தெரிவித்துள்ளார். இதுதவிர, லெபனான், சிரியா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் இஸ்ரேல்- ஈரான், லெபனான், சிரியாவை தாண்டி தற்போது துருக்கி வரை பதற்றமான நிலை நீடிக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அடங்கிய பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு நேற்று அவசரமாக கூடியது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே உருவாகி உள்ள் போர் பதற்றங்கள், இஸ்ரேல் மீது ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு தீவிரமான நிலை குறித்து பாதுகாப்பு அமைச்சரவை குழு விரிவாக விவாதித்தது. இந்நிலையில் இன்றும் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.
The post ஈரான்-இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.