ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் இதுவரை 2,462 முகாம்கள் நடத்தப்பட்டு, 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 2 கால்நடை பன்முக மருத்துவமனைகள்,6 கால்நடை மருத்துமனைகள், 106 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 24 கால்நடை கிளை நிலையங்கள் மூலம் 10 லட்சத்து 52 ஆயிரத்து 285 கால்நடைகளுக்கும்,61 லட்சத்து 87 ஆயிரத்து 54 கோழிகளுக்கும் சிகிச்சை சிகிச்சை கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அளிக்கப்பட்டு வருகிறது.
இதில், கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் நோக்குடன் மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் 200 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களின் சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு, கோபி, மொடக்குறிச்சி, பவானி, தாளவாடி, அந்தியூர், சென்னிமலை, கொடுமுடி,நம்பியூர் ஆகிய கால்நடை மருத்துவமனைகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு 9 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் வழங்கப்பட்டு, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வாகனத்தின் மூலம் உடல்நலன் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சையளித்தல்,குடற்புழு நீக்கம் செய்தல்,தடுப்பூசி போடுதல்,ஆண்மை நீக்கம்,மலடு நீக்க சிகிச்சைகள்,செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை,நோய் தடுப்பு போன்ற பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் மாவட்டத்தில் இதுவரை 2,462 முகாம்கள் நடத்தப்பட்டு, 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மூலம் பயன்பெற்ற, கொடுமுடி தாலுகா செட்டிகாட்டுப்புதூரை சேர்ந்த கால்நடை விவசாயி விஜய் கூறியதாவது:
நான் பல வருடங்களாக கால்நடைகளை வளர்த்து வருகிறேன். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு ஈரோடு கால்நடை மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது.
தற்போது தமிழக முதல்வர் வட்டார அளவில் செயல்படும் வகையில் நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தின் சேவை திட்டத்தை வழங்கியுள்ளார். இதன் மூலம் கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளித்து பாதுகாக்க முடிகிறது.
மேலும், குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், கருவூட்டல், சினைப்பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகளுக்கு கால்நடைகளை அழைத்து செல்லாமல், வீட்டிற்கு அருகிலேயே வந்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். அவசர சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா தொலைபேசி மூலம் அழைத்தால் உடனடியாக வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் கால்நடைகளை வாகனங்களில் அழைத்து செல்லும் நேரம், பண விரையமும் குறைகிறது. இத்தகைய சிறப்பான திட்டத்தினை வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு கால்நடை விவசாயிகள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மூலம் மாவட்டத்தில் 2,462 முகாம்களில் 33,221 கால்நடைகளுக்கு சிகிச்சை appeared first on Dinakaran.