*இன்றும் தொடரும் என அறிவிப்பு
சுசீந்திரம் : குமரி மாவட்ட திருக்கோயில் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஊழியர்கள் நேற்று காலை சுசீந்திரம் அறநிலையத்துறை அலுவலகத்திற்கு முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கோயில் ஊழியர்கள் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் அஜிகுமார் வரவேற்று பேசினார்.
குமரி மாவட்ட கோயில்களுக்குள் அனுமதிக்கப்பட்ட நிரந்தர பணியிடங்களில் தற்போது 352 பேர் நீண்ட காலமாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அரசு ஆணைப்படி ஊதியம் நிர்ணயம் செய்து சம்பளம் கொடுத்திடவும், அதற்கு உண்டான பணத்தை ஒதுக்கீடு செய்தபிறகும் வழங்காமல் இருக்கும் குமரி மாவட்ட திருக்கோயில் நிர்வாகத்தை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். போராட்டத்தை முன்னாள் எம்பி பெல்லார்மின் தொடங்கி வைத்து பேசினார்.
இந்த போராட்டத்தில் சிறப்பு விருந்தினராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட செயலாளர் செல்லசுவாமி ஆகியோர் கலந்துகொண்டு போராட்டம் குறித்து விளக்கி பேசினர். இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்ட தலைவர் சிங்காரம், முன்னாள் எம்எல்ஏ லீமாறோஸ், நிர்வாகிகள் உஷாபாசி, முரளிதரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் போராட்டம் நாளையும் (இன்றும்) தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
The post சுசீந்திரம் அறநிலையத்துறை அலுவலகம் முன்பு கோயில் ஊழியர்கள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.