![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/31/36774523-chennai-police.webp)
சென்னை,
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்) காரில் சென்ற பெண்களை, துரத்தி அத்துமீறும் வகையில் இளைஞர்கள் சிலர் நடந்து கொண்டனர். டாடா சபாரி காரில் வந்த இளைஞர்கள் அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவின. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சியினர் பலரும் பெண்கள் பாதுகாப்பில் சமரசம் கூடாது என்றும், உடனடியாக குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த பெண்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில்சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தேடப்பட்டு வந்தவர்களில் ஒரு கல்லூரி மாணவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஈசிஆர் வழக்கு தொடர்பாக பள்ளிக்கரணை காவல் ஆணையர் கார்த்திகேயன் விளக்கம் அளித்தார். இதுகுறித்து கார்த்திகேயன் பேசியதாவது:- ஈசிஆர் வழக்கில் இதுவரை 4 பேர் கைதாகி இருக்கும் நிலையில், 3 பேரை பிடிக்க காவல்துறையினர் தேடி வருகின்றனர். 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.காரில் இருந்த கட்சிக் கொடிக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை. காரினை ஓட்டிய ஓட்டுநர் தான் கட்சிக்கொடியை பயன்படுத்தியுள்ளார். பார்க்கிங் மற்றும் சுங்கத்துறை கட்டணத்தில் இருந்து தப்பிக்கவும் கட்சிக் கொடியை பயன்படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
7 இளைஞர்களில் 5 பேர் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். ஒரு இளைஞர் வெளி மாநிலத்திலும், மற்றொருவர் படித்து முடித்து வேலை செய்தும் வருகிறார். இந்த வழக்கில் கைதாகியுள்ள சந்துரு என்பவர் மீது 2 குற்ற வழக்குகள் இருக்கிறது. இந்த சம்பவத்தை பொறுத்தவரை கொள்ளையடிக்கும் முயற்சியும் நடக்கவில்லை.அதேபோல் பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்த பின்னர் உடனடியாக சிஎஸ்ஆர் காபி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்பின் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் உடனடியாக வழக்குப்பதிவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை கிடையாது. அதேபோல் புகார் அளித்த சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் பெண்ணின் வீட்டிற்கு சென்றுவிட்டனர்" என்றார்.