இஸ்லாமியர்களின் வாழ்வு, என்றென்றும் வளர்பிறையாக ஒளிர வேண்டும் - எடப்பாடி பழனிசாமி ரம்ஜான் வாழ்த்து

1 month ago 3

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இஸ்லாமியப் பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில், அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

ஏழை, எளியோருக்கு உணவு வழங்கி, தாமும் உண்டு, உள்ளம் மகிழும் இனிய திருநாள் ரம்ஜான் திருநாள் ஆகும். 30 நாட்கள் பகலில் பருகாமலும், உண்ணாமலும் நோன்பு இருந்து, தீய எண்ணங்கள் அனைத்தையும் அழித்து இறைவனை வழிபட்டு, அனைவரும் நலம் பெற்று வாழ வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் இஸ்லாமியப் பெருமக்கள் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், இஸ்லாமியப் பெருமக்களின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமியப் பெருமக்களின் பாதுகாவலராக 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என்றென்றும் இருக்கும் என்பதை இந்த இனிய நாளில் உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன்.

"பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; பிணியுற்றவரைச் சென்று பாருங்கள்; துன்புறுத்தப்பட்டவர்களுக்கு உதவி புரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்" என்று, நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாமியப் பெருமக்களுக்கு ஆழ்ந்த சகோதரத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளதை அனைவரும் பின்பற்றி வாழ்ந்திட வேண்டும்.

'தூய்மையும், பக்தியும் உள்ளதாய், பாவங்களற்றதாய், பொறாமை, அத்துமீறல் இல்லாத இதயமே பரிசுத்தமான இதயம்' என்று நபிகள் நாயகம் உலகிற்குப் பறைசாற்றி உள்ளதை அனைவரும் நினைவில் கொண்டு, தங்கள் கடமைகளைச் செவ்வனே மேற்கொண்டு வாழ வேண்டும் எனத் தெரிவித்து, பிறை கண்டு பெருநாள் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வு, என்றென்றும் வளர்பிறையாக ஒளிர வேண்டும் என்று மனதார வாழ்த்தி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில், இதயம் நிறைந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Read Entire Article