ஜெருசலேம்,
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனிடையே, ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்தவர்கள் அவ்வப்போது இஸ்ரேலுக்குள் புகுந்து துப்பாக்கி சூடு, கத்திக்குத்து போன்ற பயங்கரவாத தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேலில் இன்று கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. இஸ்ரேலின் ஹடிரா நகருக்குள் புகுந்த பயங்கரவாதி அங்கிருந்த பொதுமக்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பாதுகாப்புப்படையினர், தாக்குதலில் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதியை பாதுகாப்புப்படையினர் சுட்டுக்கொன்றனர்.