![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/07/38165232-yr.webp)
காசா முனை,
இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய கைதிகளுக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்கள் 1,904 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. பணய கைதிகள் 33 பேரில் சிலர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. 6 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 13 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக தற்போதுவரை 300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில், தங்கள் பிடியில் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு இன்று விடுதலை செய்கிறது. அதன்படி, ஒஹட் பென் அமி, இலி ஷராபி, ஆர் லிவி ஆகிய 3 பேரை இன்று விடுதலை செய்வதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்த 3 பேருக்கு ஈடாக தங்கள் நாட்டு சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களில் 183 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது.