
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழும் வெற்றிமாறனுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. 'விடுதலை-2' படத்தை தொடர்ந்து தற்போது சூர்யாவின் நடிப்பில் 'வாடிவாசல்' படத்தை இயக்க உள்ளார். வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான பணிகளில் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இதற்கிடையில் தனது சினிமா பயணம் குறித்து வெற்றிமாறன் மனம் திறந்து உள்ளார். அவர் கூறும்போது, "ஒரு படத்தை எடுத்து முடிக்க எவ்வளவு காலமாகும்? என்பதை இயக்குனர் தவிர வேறு யாரும் தீர்மானிக்க முடியாது, தீர்மானிக்கவும் கூடாது. சமீபத்தில் ஒரு பெண், உதவி இயக்குனராக சேர என்னிடம் வந்தார். அவரை பார்க்கும்போது 20 வருடங்களுக்கு முன்பு என்னை பார்த்தது போலவே இருந்தது. சினிமாவில் பெண் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் அதிகம் வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். தற்போது சினிமாவில் பெண்கள் சாதித்து வருவதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் வன்முறை படங்களை காட்டிலும் காதல் படங்களை தான் அதிகம் தேர்வு செய்வேன். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக இருக்கிறது. அதனால் தான் என்னவோ காதல் படங்கள் கைகூடாமல் போய் வருகிறது" என்றார்.