‘‘புதுக்கட்சி ஆட்கள் அனுமதியற்ற ஊர்வலத்தை நடத்தி மாட்டிக்கொண்டார்களாமே..’’ என கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘ஆமா.. ஆண்டுதோறும் ஜெயந்தி தினத்தின் போது, தூங்கா நகரின் இரு இடங்களில் இருக்கும் தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு, கடற்கரையோர மாவட்டத்து ஊருக்கு மரியாதை செலுத்திட பயணிப்பது அரசியல் பிரமுகர்களின் வழக்கம். இவ்வகையில் தூங்கா நகர் தெப்பக்குளப்பகுதியை நோக்கி டூவீலர்கள் புடை சூழ நடிகரின் புதுக்கட்சிக் கூட்டம் கத்தியபடி ஊர்வலமாக வந்திருந்து மாலை போட்டுவிட்டு அங்கேயே நெரிசல் தரும் விதத்தில் டூவீலர்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு, கார்களில் கிளம்பிப் போய் விட்டதாம்.
இதனைத் தட்டிக் கேட்டதால் போலீஸ் அதிகாரிக்கும், புதுக்கட்சிக் கூட்டத்திற்கும் பெரும் வாக்குவாதமே நடந்தது. அனுமதியற்ற ஊர்வலத்துடன், நெரிசலுக்கும் வழிவகுத்ததால் டூவீலர்களை பறிமுதல் செய்த போலீஸ், வழக்குப்போட்டு அனுப்பியது. எந்த விதிமீறல்களுமின்றி அத்தனை அமைப்புகளின் வாகனங்களும் அமைதியான முறையில் வந்து போன நிலையில், புதுக்கட்சி கூட்டத்தினர் மட்டும் தங்களை அடையாளப்படுத்துவதற்கென அலம்பல் செய்து அத்தனை பேரையும் அவதிக்கு ஆளாக்கியது, இப்பகுதி பொதுமக்களிடம் ‘இப்பவே இப்படின்னா எப்படிங்க இவங்க கட்சிய வளர்க்கிறது?’ன்னு கேள்விக்குரல்கள் ஓங்கி ஒலித்தன..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை பார்ட்டியில மாவட்ட ெசயலாளர்களை மாத்துற முடிவு எடுத்திருக்குறதாக பேச்சு அடிபடுதே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல இலை பார்ட்டி 4 மாவட்டங்களாக இருக்குது. இதில் வடக்கு மாவட்டத்துல செய் ஆறு, வந்தா வாசி, மத்திய மாவட்டத்துல போள் ஊர், ஆறு அணி இருக்குது. நிர்வாக வசதிக்காக வந்தா வாசி, போள் ஊர் ஒரு மாவட்டமாகவும், செய் ஆறு, ஆறு அணி ஒரு மாவட்டமாகவும் மாத்துற எண்ணத்துல இலைபார்ட்டி தலைமை இருக்குறதாக சொல்றாங்க.
இதுல ஏற்கனவே வடக்கு மாவட்டத்துல தூசியை அடைமொழியாக கொண்டவரை மாற்றலாம்னு இலை வட்டாரத்துல பரவலாக பேச்சு அடிபடுதாம். அவருக்கு பதிலாக நியமிக்க சில பெயர் பட்டியல் தயாராகிட்டதாக சொல்றாங்க. அதுமட்டுமில்லாம, சில ஒன்றிய செயலாளர்கள் சரி வர வேலை செய்யாதவர்களை மாற்றும் எண்ணத்துலயும் இலை பார்ட்டி தலைமை முடிவு செய்திருக்குதாம். 10 ஆண்டுல, பல சி சேர்த்தவர்கள், செலவு செய்யவே தயங்குறதால, தலைமை அதை உற்று கவனிக்குதாம்.
அவர்களுக்கு கல்தா கொடுக்க இந்த மாதிரி முடிவு எடுக்க இருக்குறதாக பார்ட்டிக்குள்ள பேசிக்கிறாங்க. தனக்கு விசுவாசமான ஆட்களை உருவாக்க சேலத்துக்காரர் முடிவு செஞ்சிருக்காராம். இதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்கள்ல வர வாய்ப்பு இருக்குறதாக சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வைத்தியை கொங்கு மண்டலத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சந்தித்தார்களாமே..’’ என கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம் மாவட்டத்தை சேர்ந்த வைத்தியானவர் சொந்த மாவட்டத்திலேயே இருந்து வருகிறாராம். தீபாவளியன்று நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள், அவரை நேரில் சென்று சந்தித்தார்களாம். தொடர்ந்து, கொங்கு மண்டலத்தை சேர்ந்த சிலர், வைத்தியானவரை ரகசியமாக சந்தித்து விட்டு சென்றார்களாம்… பண்டிகை தினத்தில் அவரை சந்தித்து உள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளதாம்.
கொங்கு மண்டலத்தில் இருந்து வைத்தியானவரை சந்தித்து யார் என்பது ரகசியமாக இருந்து வருகிறது. அந்த முக்கிய நபர், சில விஷயங்களை வைத்தியானவரிடம் தெரிவித்து விட்டு சென்றாராம்… சாதரணமாக வந்து விட்டு அந்த முக்கிய நபர் சென்றாராம்… தற்போது, நெற்களஞ்சியம் மாவட்டத்தில் இந்த டாப்பிக் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது..’’ என்றார் விக்கியானந்தா.
’’இலைக்கட்சி தலைவரின் ஊரில் பதவி ஈசியா கிடைக்குதாமே..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி தலைவரின் மாங்கனி ஊரில் கட்சியை சீரமைக்க போறதா, அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த பகுதியை சேர்ந்த மாஜி ஒருவர் நியமிக்கப்பட்டிருக்காராம். இவரது அதிரடியால் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் ஒடுங்கி, நடுங்கிப்போய் இருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க. அவரது வண்டி தங்களது பகுதிக்குள் வந்தாலே என்ன நடக்குமோ என்று அஞ்சும் நிலை ஏற்பட்டிருக்காம். அவரை எதிர்த்து பேசினால் பதவி காலியாகும் என்பது உறுதியாகியிருக்காம்.
இப்படித்தான், உங்களுக்கு நான் அடிமையா என கேட்ட பகுதி செயலாளரின் பதவி பறி போயிடுச்சாம். எதுவாக இருந்தாலும் கட்சி தலைவரிடம் போய் கேள் என அதிரடி காட்டுறாராம். இதே நிலை நீடித்தால், மாநகரில் போஸ்டர் ஒட்டுவதற்கு கூட ஆட்களே இல்லாத நிலைக்கு நெல்லிக்கனி மாஜி கொண்டு போய்விடுவாரென கட்சிக்காரங்க சொல்றாங்க. மாங்கனி நகருக்கு வரும் போது கட்சிக்காரங்க காரில் தான் உலா வருவாராம். அவருக்கு கார் ஓட்டுபவருக்கு கூட நல்ல பதவியை கொடுத்திருக்காராம்.
இப்படித்தான் ஒருநாள் காரில் போகும்போது, அண்ணே.. நான் ஆபீஸ் போடும் வகையில் ஒரு பதவிய தாங்கன்னு நிர்வாகி ஒருவர் கேட்டாராம். அப்படின்னா நான் சொல்வதை கேட்பாயான்னு சிரிச்சிக்கிட்டே கேட்டாராம் மாஜி. அவரும் உடனே எள் என்றால் எண்ணெய்யாகி நிற்பேன்னு தலையாட்டியிருக்காரு. இதையடுத்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி அவருக்கு உடனே கிடச்சிருச்சாம். இப்படியாக மாநகர இலைக்கட்சியின் நிலை ஏற்பட்டிருப்பதாக ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க..
பகுதி செயலாளர் பொறுப்புக்கு கூட, நான் தகுதியில்லாம போயிட்டேனான்னு கேள்வி கேட்ட மக்கள் பிரதிநிதி ஒருவர், அவரது ஆபீசுக்கு பூட்டு போட்டுட்டு வீட்டுக்கு போயிட்டாராம். அதே போல நாலு நிர்வாகிகள் மா.செ.பதவியை குறி வச்சி மாஜியோடு கைகோர்த்திருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வரவேற்க ஆளே வரவில்லை என வருத்தப்பட்டாராமே மாஜி மந்திரி..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியின் மாஜி அமைச்சர் ராஜேந்திரமானவர் கடைக்கோடி மாவட்டத்தில் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அங்குள்ள பகவதி அம்மன் கோயில்களில் அவர் பயபக்தியுடன் தரிசனம் செய்தார். அவர் கோயில்களில் வந்து தரிசனம் செய்வது இது புதிதல்ல என்றாலும் இப்போது உள்ளூர் நிர்வாகிகள் சிலர் மட்டுமே அவர் வருகையை அறிந்து அவரை வரவேற்றிருந்தனர். முக்கிய நிர்வாகிகள் பலரும் அவரை கண்டுகொள்ளவில்லையாம். இங்கேயே இலை கட்சியில் பல கோஷ்டிகள் இருக்க, எந்த கோஷ்டியும் அவரை கண்டுகொள்ளாததில் ராஜேந்திரமானவருக்கு வருத்தமாம். ஆட்சி, அதிகாரத்தில் இருந்தால்தான் எல்லோரும் தேடி ஓடி வருவார்கள், இல்லையெனில் இப்படித்தான் இருக்கும் என்றுணர்ந்து நொந்துபோனாராம்..’’ என்று சொல்லி முடித்தார் விக்கியானந்தா.
The post இலை பார்ட்டியில் மா.செ.க்களை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.