இலை ஆட்சியில் கூட்டுறவுத் துறை ஊழல் பூதாகரமாக வெடித்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

3 weeks ago 4

‘‘தவறான ஐடியா கொடுத்து இலைக்கட்சி தலைவரை நிழலானவரு பாதாளத்தில் தள்ளி விடாமல் இருந்தால் சரிதான்னு ரத்தத்தின் ரத்தங்கள் புலம்புறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரின் சொந்த ஊரில் கட்சிக்காரங்க ரொம்பவே அப்செட்டா இருக்காங்களாம்.. தலைவருக்கு நெருங்கிய நண்பராக இருப்பவர்தான் மாங்கனி புறநகர் மா.செ.வாம்.. இவரது விசுவாசத்தை பார்த்த இலைக்கட்சி தலைவர் மம்மி தனக்கு வழங்கிய மா.செ.பதவியை கொடுத்து அழகு பார்த்தாராம்.. இதனால இலைக்கட்சி தலைவரின் நிழலானவருன்னு கட்சிக்காரங்க சொல்லிட்டு வர்றாங்க.. ஆனால் யாரெல்லாம் பக்கபலமாக இருந்து உயர்வுக்காக கை தூக்கிவிட்டாங்களோ, அவர்களை நசுக்குவதுதான் இலைக்கட்சி தலைவரோட ஸ்பெஷலாம்.. அதிலிருந்து தப்பி வருபவர்தான் நிழலானவர். இவரின் ரகசியங்கள் தெரிந்ததால் அவரிடம் இலைக்கட்சி தலைவர் நெளிந்து போவதாக கட்சிக்காரங்களே சொல்றாங்க.. அதே நேரத்தில் மம்மி காலத்துல இருந்த தொண்டர்களின் எண்ணிக்கையை கூடுதலா ஒரு மடங்கு உயர்த்தி மம்மியை விட மாங்கனி மாவட்டத்துக்காரர்தான் பெரியவர் என்பதை காட்டியே ஆகணுமுன்னு ஐடியா கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அனைவருக்கும் உறுப்பினர் அடையாள அட்டை கொடுக்கப்படும் என்ற திட்டத்தை கொடுத்ததும் நிழலானவருன்னு கட்சிக்காரங்க சொல்றாங்க. இந்த ரகசியத்தை மாஜி மந்திரியான அக்ரி உடைச்சி விட்டுட்டாராம்.

மாங்கனி மாவட்டத்துல நடந்த பொதுக்கூட்டத்துல பேசிய அக்ரி, இலைக்கட்சி தலைவருக்கு ஐடியா கொடுப்பதே நிழலானவருன்னு ஒரு உண்மைய சொல்லிட்டாராம்.. இதனை மேடையில் இருந்த நிழலானவரும் மகிழ்ச்சி பொங்க கேட்டு ரசிச்சிக்கிட்டு இருந்தாராம்.. இதனால இலைக்கட்சி தொண்டர்கள் அதிர்ச்சியில இருக்காங்களாம்.. கட்சியை இலைக்கட்சி தலைவர்தான் சிறப்பா வழிநடத்துகிறார் என்றிருந்தோம்.. ஆனால் நிழலானவரு ஆலோசனை சொல்வதாக கூறி இலைக்கட்சி தலைவரை டம்மியாக்கிட்டாரு.. இதையெல்லாம் பார்க்கும்போது நிழலானவரு ஒரிஜினலாகவும், ஒரிஜினல் நிழலாக மாறிபோனதாகவே தெரிகிறது. கட்சியில் 2.15 கோடி தொண்டர்கள் இருப்பதாக சொன்னாங்க.. ஆனா 90 லட்சம் ஓட்டுதான் கட்சிக்கு விழுந்திருக்கு. கூடுதல் தொண்டர்கள் இருக்கிறார்கள் என கூறி, டபுள் எண்ட்ரியாக போட்டு, மாங்கனி மாவட்டத்துல 15 சதவீத உறுப்பினர் அடையாள அட்டையை கொடுக்க முடியாம இருக்கு.. இவ்வாறு தவறான ஐடியா கொடுத்து இலைக்கட்சி தலைவரை பாதாளத்திற்கு நிழலானவரு தள்ளிவிடாம இருந்தால் சரிதான்னு ரத்தத்தின் ரத்தங்கள் புலம்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘டெல்டாவில் இலை கட்சியின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாததால் தலைமை ரொம்பவே அப்செட்டில் இருக்கிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘2026 சட்டமன்ற தேர்தலுக்கு தற்போதே தயாராக இருக்க வேண்டும் என இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு சேலத்துக்காரர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.. தொடர்ந்து, மாஜி அமைச்சர்கள் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று தொகுதியின் நிலை, தொண்டர்களின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளனராம்.. இதில் கடலோரம், மனுநீதி சோழன், நெற்களஞ்சியம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கட்சியின் செயல்பாடுகளில் தலைமைக்கு திருப்தி இல்லை. இதனால் தலைமை அப்செட்டில் இருந்து வருகிறதாம்… மாற்று வழியை கையாள வேண்டும்னு முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு தலைமை ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாம்.. இந்த வேலை தற்போது டெல்டா மாவட்டத்தில் நடந்து வருகிறதாம்.. முக்கியமாக, கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தலைமை திட்டமிட்டு செயல்பட போகுதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பெட்டிக்கடைகாரர் உதவியுடன் வாகன ஓட்டிகளை மடக்கிப்பிடித்து கூகுள் பே மூலம் கல்லா கட்டும் அதிகாரி தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘பனியன் நகரில் முருக கடவுள் பெயர் கொண்ட போலீஸ் ஸ்டேசன்ல அரசரின் மறுபெயர் கொண்ட எஸ்எஸ்ஐ ஒருவர் வேலை செஞ்சிட்டு இருக்கிறாரு.. ஸ்டேசன் வேலையவிட கல்லா கட்டுவதில் தான் முழுசா கவனம் செலுத்துகிறாராம்.. கடந்த சில நாட்களுக்கு முன்னாடி ஹெல்மெட் அணியாமல் பைக்கில் போன ஒருவரை பிடிச்சு கேஸ் போடுவதற்கு பதிலாக அந்த நபர்கிட்ட லஞ்சத்தை வாங்கிகிட்டு விட்டுட்டாராம்.. இந்த தகவல் அதிகாரிங்க காதுக்கு போயிருக்கு.. அதிகாரிங்க அழைச்சு விசாரணை நடத்தி லஞ்சம் பணத்தை திரும்பவும் கொடுக்க வெச்சுட்டாங்களாம்.. லஞ்சம் வாங்குன எஸ்எஸ்ஐயை கடுமையா எச்சரித்து அதிகாரிங்க அனுப்பி இருக்காங்க.. ஆனா லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்ட எஸ்எஸ்ஐ கை சும்மா இருக்குமா?. கையில நேரடியா வாங்கினாத்தானே பிரச்னை வருதுன்னு யோசிச்ச எஸ்எஸ்ஐ, இப்ப கூகுள் பே மூலம் வாங்க ஆரம்பிச்சிட்டாராம்.. ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதிகளில் சரக்கு வாகனங்களை பிடித்து மாதாமாதம் மாமூல் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தி வருகிறாராம்.. கூகுள் பே மூலம் லஞ்சம் வாங்குவதற்கு வசதியாக பாண்டியன்நகரில் பெட்டிக்கடை வியாபாரி ஒருவரை அப்பாயின்மென்ட் செய்துள்ளாராம்.. அதற்கு கைமாறாக அந்த பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய சிறப்பு அனுமதி வேறு அளித்து இருக்கிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை ஆட்சியில் நடந்த கூட்டுறவுத் துறை ஊழல் பூதாகரமாக வெடித்து, தற்போது மீண்டும் பரபரப்பாகி இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புரம் என்று முடியும் மாவட்டத்தில் இலை ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் மிகப்பெரிய ஊழலில் சிக்கிய பெண் அதிகாரி மீது நடவடிக்கை கோரி வலுவாக கோரிக்கை எழுந்திருக்கிறதாம்.. இலை ஆட்சியில் 2019-20 காலகட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கியில் விழுப்புரம், விக்கிரவாண்டி கிளை வங்கி கட்டிட நிதியில் சுமார் 50 லகரம் கையாடல் செய்ததாக மத்திய கூட்டுறவு வங்கி உதவி மேலாளரை வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்திருக்கிறார்களாம்.. ஆனால் இவருக்கு மேல் இணை இயக்குனர் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் அதிகாரிதான் இந்த முறைகேட்டுக்கு காரணம் என்று தற்போது ஆதாரத்துடன் புகார்கள் எழுந்துள்ளதாம்.. கரண்ட் அதிகாரிகளும், வணிகக் குற்றவியல் காக்கிகளும் சேர்ந்து கறைபடிந்த பெண் அதிகாரியை காப்பாற்ற முயற்சித்து வருகிறார்களாம்.. இதற்காக காக்கும் அதிகாரிகளுக்கு கரன்சி மழையும் பொழியப்பட்டுள்ளதாம்.. இதனால் தொடக்க வேளாண்மை சங்கத்திலிருந்து சிலர் ஆதாரத்துடன் தலைமை பதிவாளருக்கு புகார்கள் அனுப்பி இருக்கிறார்களாம்.. இலை ஆட்சியில் நடந்த கூட்டுறவுத்துறை ஊழல் விவகாரம் தற்போது பூதாகரமாக வெடிக்க புரம் மாவட்டம் மீண்டும் பரபரப்பாகி இருக்கிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post இலை ஆட்சியில் கூட்டுறவுத் துறை ஊழல் பூதாகரமாக வெடித்திருப்பதை பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article