ஓசூர்: பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, ₹30 லட்சத்தை வாங்கி மோசடி செய்த கார் டிரைவரை கடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா கோட்டை உலிமங்கலத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (32). இவர் ஓசூரில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரை மர்ம நபர்கள் சிலர், காரில் கடத்தி செல்வதாக ஓசூர் டவுன் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார், ராயக்கோட்டை சாலை வைரமங்கலம் பிரிவு பாதையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கடத்தல் கும்பலுடன் வேணுகோபால் இருந்தது தெரியவந்தது. அனைவரையும் பிடித்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் வேணுகோபால் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, சில நாட்களுக்கு முன்பு கோட்டை உலிமங்கலத்தை சேர்ந்த கேசவமூர்த்தி (எ) கேசவனிடம் ₹30 லட்சம் பெற்றுள்ளார். ஆனால், அவர் கூறியபடி பணத்தை இரட்டிப்பு செய்து தரவில்லை. இதனால், கேசவமூர்த்தி பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் வேணுகோபாலால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதையடுத்து வேணுகோபாலின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த கேசவமூர்த்தி (32), தனது நண்பர்களான வெங்கடாசலபதி (32), மணி (29), ஹரிஷ் (32), மனோஜ்(23) ஆகியோர் உதவியுடன், வேணுகோபாலை காரில் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த ஓசூர் டவுன் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ₹30 லட்சம் வாங்கி மோசடி செய்த டிரைவர் காரில் கடத்தல்: 5 பேர் கும்பல் கைது appeared first on Dinakaran.