மதுரை: விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 27 டன் யூரியா உரம், இலங்கைக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரிய மனுவுக்கு டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த எஸ்.சரவணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: மத்திய அரசு விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் பிரதான் மந்திரி பாரதிய ஜன் உர்வராக் பிரியோஜனா (பிஎம்பிஜெபி) திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் 14 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தமிழகம் முழுவதும் 4474 அரசு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் / கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் விற்கப்படுகின்றன.