குடியாத்தம்: குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று காலை பக்தர்களின் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவும் முதன்மையானதாகும். ஆண்டுதோறும் ைவகாசி மாதம் 1ம்தேதி இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதில் வேலூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும், கர்நாடகா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்தாண்டு சிரசு திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் கெங்கையம்மன், துர்கை அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ெதாடர்ந்து அம்மன் திருக்கல்யாணமும், நேற்று தேரோட்டமும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சிரசு ஊர்வலம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் கெங்கையம்மனுக்கு பால், தயிர், சந்தனம், குங்குமம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்பட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் அதிகாலை தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மேள, தாளம், பம்பை, உடுக்கையுடன் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் தொடங்கியது. பிரம்மாண்டமான குடைகளுடன் பக்தர்கள் தலைசுமையாக கெங்கையம்மன் சிரசை எடுத்து வந்தனர்.
வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், கெங்கையம்மன் சிரசை தொட்டு வணங்கினர். அதேபோல் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த சிரசின் மீது மலர்களை தூவியும், கற்பூர ஆரத்தி எடுத்தும் அம்மனை வழிபட்டனர். சிரசு ஊர்வலத்தின்போது சிலம்பாட்டம், புலி ஆட்டம், கொக்கலிக்கட்டை உள்பட பாரம்பரிய நடனமாடியபடி பங்கேற்றனர். முக்கிய வீதிகள் வழியாக சிரசு ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டு கெங்கையம்மன் கோயில் மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது. பின்னர் அம்மனுக்கு கண்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் அம்மனுக்கு கூழ்வார்த்து, படையலிட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கெங்கையம்மனை வழிபட்டனர். அதேபோல் கோழி, ஆடு ஆகியவற்றை பலியிட்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
உள்ளூர் விடுமுறை
சிரசு திருவிழாவையொட்டி வேலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாணவேடிக்கை
இன்றிரவு கோயில் பின்புறம் கவுண்டய நதியில் கண்கவர் வாணவேடிக்கை நடைபெற உள்ளது. இதைதொடர்ந்து நள்ளிரவு சண்டாளச்சி உடலில் இருந்து சிரசு எடுக்கப்பட்டு மீண்டும் ஊர்வலமாக சுண்ணாம்புபேட்டையில் உள்ள சலவை படித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இயைதடுத்து அம்மன் சிரசு தரணம்பேட்டை முத்தியாலம்மன் ேகாயிலுக்கு கொண்டுசெல்லப்படும். நாளை ெகங்கையம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், நாளை மறுநாள் பூபல்லக்கு, 22ம்தேதி விடையாற்றி உற்சவத்துடன் சிரசு திருவிழா நிறைவடைகிறது.
The post குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.