இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்: அரசு வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்

4 hours ago 1

சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்த வாகனத்தில் அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர். ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி அதிகாலை விசைப்படகில் சென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சுற்றி வளைத்து கைது ெசய்யப்பட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க, மீனவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசர கடிதம் எழுதி, மீனவர்களையும் அவர்கள் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரினார். இதனால், இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் இலங்கை நீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பு, புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு மீனவர் ஆகிய 5 மீனவர்களை விடுதலை செய்தது. இதையடுத்து இவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்கள் 5 பேரையும், தங்கள் பராமரிப்பில் சில நாட்கள் வைத்திருந்து, அதன் பின்பு அவர்களை இந்தியாவிற்கு அனுப்பும் வகையில், விமான டிக்கெட்டுகள் ஏற்பாடுகள் செய்தனர். நேற்று முன்தினம் இரவு இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 5 தமிழக மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் மீனவர்களை தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

 

The post இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் சென்னை வந்தனர்: அரசு வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர் appeared first on Dinakaran.

Read Entire Article