தொண்டி, ஜன.30: இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையால் தொண்டி நம்புதாளை மற்றும் சுற்றுவட்டார மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். குழந்தைகளை படிக்க வைக்க கூட முடியாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடல் தொழில் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் உள்ளது. உணவுக்காக கடல் மீன்களை கரை ஓரங்களில் பிடித்த மனிதன் கால போக்கில் மரம், கட்டை உள்ளிட்டவைகளின் உதவியுடன் சற்று ஆழத்திற்கு சென்றான். நாகரீக வளர்ச்சி காரணமாக படகு, கப்பல் மூலம் கடல் கடந்து வணிகத்திலும் ஈடுபட்டான். பண்டைய வரலாற்று நூல்களில் தமிழன் பல்வேறு நாடுகளுடன் கடல் வழியாக வணிக தொடர்பு வைத்ததற்கான ஆதாரங்கள் அதிகம் உண்டு. உள்ளுரில் உணவிற்காக மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக் கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி வளர்ந்து வரும் நகர் பகுதியாகும். தொண்டி, நம்புதாளை, லாஞ்சியடி, சோழியக்குடி உள்ளிட்ட பகுதியின் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. முற்றிலும் கடல் பகுதியான இங்கு துறைமுகம் அமைக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. காரங்காடு, முள்ளிமுனை, சோலியக்குடி, நம்புதாளை உள்ளிட்ட பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மற்றும் விசைப்படகுகள் உள்ளது. கந்து வட்டிக்காரர்களிடம் அதிக வட்டிக்கு கடனை வாங்கி போதிய வருமானம் இல்லாமல் பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் எத்தனையே மீனவர்கள் கஷ்டப்படுகின்றனர். சிலர் கடனை அடைக்க தங்கள் குழந்தைகளையும் கடலுக்கு அழைத்து செல்கின்றனர். இதனால் குழந்தைகளின் படிப்பும் பாதியில் நின்று விடுகிறது. இடைநிறுத்திய மாணவர்கள் இங்கு ஏராளம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயதிலேயே தொழிக்கு செல்வதால் விரைவில் சிலர் போதைக்கும் அடிமையாகி விடுகின்றனர். நாட்டு படகு மீனவர்கள் சற்று தொலைவிற்கு சென்றாலும் எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுகின்றனர். மீன்வர்கள் கைது விலை உயர்ந்த படகு மற்றும் வலைகளை பறித்துக் கொள்வது என அட்டூழியம் தொடர்கிறது. கடந்த காலங்களில் தமிழக படகுகள் 200க்கும் மேல் பறிமுதல் செய்துள்ளனர். இதில் நம்புதாளை படகு மட்டும் பத்து ஆகும். இதில் மூன்று படகை இலங்கை அரசு விடுவித்தும் இன்றும் நாடு வந்து சேரவில்லை. இலங்கை அரசின் அட்டூழியம் நாட்டு படகு மீனவர்கள் வாழ்வில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு துப்பாக்கிசூடு நடத்தி மீனவர்களை பிடித்துள்ளனர். படகுகளை மோதி சேதமடைய செய்துள்ளனர். இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.
இதுகுறித்து நம்புதாளை மீனவர்கள் நாகேந்திரன், விஜய் கூறியது, ‘‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பார்கள். நாங்கள் எங்கள் வாழ்விற்காக கடலுக்கு செல்கிறோம். உயிரை பணயம் வைத்து இரவு நேரத்தில் எந்த வெளிச்சமும் இல்லாமல் வலையை விரித்து வைத்து காத்திருப்போம். சில நேரம் நல்ல மீன்பாடு வரும். சில நாள் டீசலுக்கு கூட வழி இருக்காது. பைபர் படகு மற்றும் வல்லம் மூலம் செல்வதால் அதிக தூரம் செல்ல முடியாது கிடைப்பதை வைத்து வாழ்வை நகர்த்துகிறோம். இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி பிடித்துச் செல்கின்றனர். படகுகளை பறிமுதல் செய்வதால் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் விரைவில் பேச்சு வார்த்தை சுமூக உறவை மேம்படுத்த வேண்டும்’’ என்றனர். மீனவர்களின் குடும்பத்தினர் கூறுகையில்,‘‘ வீட்டில் உள்ளவர்கள் கடலுக்கு சென்றால் மீண்டும் திரும்பி வந்தால்தான் உண்டு.
இலங்கை கடற்படையின் தொல்லையால் வீட்டிற்கு வருவது நிச்சயமற்ற நிலையாக உள்ளது. மீன்பிடி தொழில் முறையாக செய்தும் சில நேரங்களில் மீன்பாடு இல்லாமல் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை இருக்கிறது. அப்படிபட்ட சூழ்நிலையில் இலங்கை கடற்படையால் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எங்களை போன்றவர்களின் படகை இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளதால், வாழ்வாதாரம் முற்றிலும் இழந்துள்ளனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தான் எங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். இலங்கையில் உள்ள படகுகளை மீட்டு, சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க வேண்டும். மேலும் மீன்பிடி உரிமையை பெற்றுத்தர முயற்சிக்க வேண்டும். இந்தியா,இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு வரவேண்டும்’’ என்றனர்.
The post இலங்கை கடற்படை அட்டூழியம் மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்பு appeared first on Dinakaran.