இறைவன் கிரயம் செலுத்திவிட்டார்

3 hours ago 2

ஒருவன் வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பி, வெகு சிரமத்தின் மத்தியில் தன் சொத்துக்களை எல்லாம் விற்று கப்பலில் பயணம் செல்ல டிக்கெட் வாங்கினான். கப்பல் பயணம் அவனுக்கு ஒரு பக்கம் சந்தோஷத்தைக் கொடுத்தாலும், உணவு வாங்கி சாப்பிடுவதற்கு கையில் பணம் இல்லாமல், சாப்பிடாமலேயே இருந்தான். பசி அதிகமாகவே அவன் மயங்கி விழுந்தான். அவன் முகத்தில் தண்ணீர் தெளித்த மற்ற பயணிகள், அவனிடம் விசாரித்தபோது, அவன் சாப்பிடாமல் இருப்பது தெரிய வந்தது. ஒரு பயணி அவனிடம்; ‘‘ஏன் சாப்பிடாமலே இருக்கிறீர்கள், கப்பல் உணவகத்தில் (கேண்டீன்) சாப்பிட வேண்டியது தானே?’’ எனக் கேட்டார். அதற்கு அவன்; ‘‘ஐயா என்னிடம் பணம் எதுவும் கையில் இல்லை. என் சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றுத்தான் என்னால் இக்கப்பலில் பயணம் செய்ய முடிகிறது. இனிமேல் நான் அக்கரை சென்று வேலை செய்தால்தான் என்னால் சாப்பிட முடியும்’’ என்றான்.அதைக் கேட்ட சகபயணிகள், ‘‘அட விவரம் தெரியாதவனே, நீ இந்த கப்பலில் பயணிக்க டிக்கெட் வாங்கும்போதே, உணவகத்தில் சாப்பிடவும் பணம் செலுத்திவிட்டாய்.

இப்படி வீணாய் உன் உடலை கெடுத்துகொண்டாயே!’’ என அவனுக்காகவருந்தினார்கள்.இறைமக்களே, இறைவேதம் ‘‘அவருக்குள் (இயேசு கிறிஸ்துவுக்குள்) ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது’’ (கொலோசெயர் 2:3) என தெளிவாக எடுத்துரைக்கிறது. ஆம், இயேசு கிறிஸ்துவை நமக்கு சொந்தமாக்கினால் போதும். மற்றனைத்தும் அவருக்குள் இருக்கிறது. அவர் வாயிலாக நமக்கு கிடைக்கிறது. எனவே தேவன் நமக்கு கொடுக்கும் வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.நாம் வாழ்வில் வெற்றி பெற எல்லா கிரயத்தையும் தேவன் ஏற்கனவே சிலுவையில் செலுத்திவிட்டார். எனவே இயேசு என்னும் நாமத்தில் இறை சித்தத்தை பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். உங்களுக்கு அவசியமாக இம்மைக்குரிய மற்றும் இறை ஆசீர்வாதங்கள் அனைத்தும் எங்கேயோ அல்ல, உங்கள் அருகே தான் இருக்கிறது. இறைவனை விஸ்வாசித்து, அவர் பாதையில் நடப்போருக்கு சகலமும் நிறைவாகவும், நன்மையாகவும் நடக்கும் என்பது நிச்சயமே!

அருள் முனைவர்: பெ.பெவிஸ்டன்

The post இறைவன் கிரயம் செலுத்திவிட்டார் appeared first on Dinakaran.

Read Entire Article