இறைவனிடம் எப்படி வேண்டுவது?

3 months ago 17

மாணிக்கவாசகரிடம் சிவபெருமான் ‘‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டபொழுது, மாணிக்கவாசகர், ‘‘எனக்கு என்ன வரம் தரவேண்டும் என்பதை நீதான் அறிவாய். அடியேனுக்கு வேண்டியதை நீயே தருவாய்’’ என்று சொல்லிவிடுகின்றார். பொறுப்பை இறைவன் கையில் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார்.

‘‘இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் பொழுது இன்னது கொடு’’ என்று பிரார்த்தனை செய்வதைவிட,’’ எனக்கு எது நன்மையோ அதைக் கொடு’’ என்று பிரார்த்தனை செய்வது சிறந்தது. காரணம், நமக்கு எது நன்மையைத் தரும் என்பது நமக்குத் தெரியாது. நாம் கேட்கின்ற பொருளே நமக்கு எதிராக மாறிவிடுவதும் உண்டு.

அதைப் போலவே, நாம் வாக்குறுதிகள் தரும் பொழுதும், கால நிர்ணயம் செய்து தந்துவிட முடியாது. காலத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் நமக்கு இல்லை. இறைவனுக்கு மட்டும்தான் உண்டு. அதனால் ‘‘இயலுமானால் செய்கிறேன்’’ என்று மட்டும் சொல்ல வேண்டுமே தவிர, இந்த காலத்திற்குள் செய்துவிடுகிறேன் என்றெல்லாம் நிர்ணயம் செய்கின்ற ஆற்றல் நமக்குக் கிடையாது. இதை உணர்த்துவதுதான் மகாபாரதத்தின் ஜயத்ரதன் வதம். ஜயத்ரதன் சிந்துநாட்டு அரசன். கௌரவர்களின் தங்கை. துச்சலையின் கணவன். இவனது தந்தை விருத்தட்சத்ரன்.

ஜயத்ரதன் பிறந்தபோது ஓர் அசரீரி ‘இவன் போரில் புகழ்படைத்து வீர சுவர்க்கம் அடைவான்’ எனக்கூறியது கேட்டு ஜயத்ரதன் தந்தை, ‘என் மகன் தலையை தரையில் விழும்படி செய்பவன் தலை சுக்கு நூறாக வேண்டும்’ என்றான். இது தேவையற்ற சபதம். ஜயத்ரதன் வீரனாக இருந்தாலும், நல்லவனாக இல்லை.

காம்யக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள், ஒருநாள் வேட்டைக்கு சென்றிருந்த போது, திரௌபதி தனித்து இருந்தாள். அப்போது அங்கு வந்த ஜயத்ரதன், ஆசிரமத்தில் திரௌபதியைக் கண்டதும் காமம் கொண்டு, அவளைத் தூக்கிச் செல்ல முயன்றான். வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஜயத்ரதன் திரௌபதியை அபகரித்துச் சென்றுவிட்டதை அறிந்தனர். தேர் சென்ற சுவடைக் கொண்டு அவனிடத்தைக் கண்டு, ஜயத்ரதனுடன் போரிட்டனர்.

ஜயத்ரதன் தோல்வியடைந்து பிடிபட்டான். உயிரை வாங்காது மொட்டையடித்து அனுப்புகின்றனர். நாணித் தலைகுனிந்து திரும்பிய ஜயத்ரதன், பரமசிவனை நோக்கி கடும் தவமிருந்து அவரிடம் பாண்டவர்களைக் கொல்லத்தக்க வலிமையை வேண்டுகிறான்.

பரமசிவனார், ‘‘ஒரே ஒரு நாளுக்கு, அர்ஜுனன் – கண்ணன் இணையைத் தவிர்த்து, போர்க் களத்தில் ஜயத்ரதன் யாரை வேண்டுமானாலும் எளிமையாய்த் தோற்கடிக்கும் ஆற்றலைப் பெறுவான். அந்த நாளையும் ஜயத்ரதனே தேர்வு செய்துகொள்ளலாம்’’ என வரம் கொடுத்துவிட்டு மறைந்துவிடுகிறார். பதிண்மூன்றாம் நாள் போரில் துரியோதனன் திட்டப்படி துரோணர் சக்கர வியூகம் அமைத்து போரை நடத்துகிறார்.

அர்ஜுனனும் – கிருஷ்ணரும் அச்சமயம் யுத்தக் களத்தில் வேறிடத்தில் இருந்ததால், அபிமன்யு மட்டும் சக்கர வியூகத்தை உடைத்துப் போகத் துணிகிறான். பின்னாலேயே பீமனும் மற்ற வீரர்களும் அவனுடனேயே உள்ளே நுழைவதாக ஏற்பாடு.

ஆனால், ஒருநாள் மட்டும் அர்ஜுனனைத் தவிர மற்ற பாண்டவர்கள் நால்வரையும் எதிர்கொண்டு தடுக்கும் பலத்தினை வரமாய்ப் பெற்ற ஜயத்ரதன், பின் தொடர்ந்த பாண்டவர்களை ஜெயத்ரதன் முன்னேறவிடாமல் தடுத்துவிடுகிறான். வீராவேசமாக போரிட்ட சிறுவன் அபிமன்யுவைக் கொன்றுவிடுகிறார்கள். அர்ஜுனன் அடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் அபிமன்யு கொல்லப்பட காரணமான ஜயத்ரதனை கொல்வதாகவும், அவ்வாறு இயலாவிடில் தீப்புகுவதாகவும் சபதம் செய்கிறான். அன்று காலையிலிருந்து ஜயத்ரதன், மறைவாகவே இருந்தான். துரியோதனன், கர்ணன் போன்றவர்கள், அவனுக்குப் பாதுகாவலர்களாக இருந்தனர். அர்ஜுனனால் ஜயத்ரதனை நெருங்கவும் முடியவில்லை; அவன் இருக்கும் இடமும் தெரியவில்லை. மாலை நேரமும் வந்துவிட்டது,

“என்ன கிருஷ்ணா… சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே… ஜயத்ரதனை எப்படிக் கொல்வது?’ என்று கேட்டான். சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் பகவான்; இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான்.

“சூரியன் அஸ்தமித்துவிட்டான். இனி, அர்ஜுனன் தீக்குளித்துவிடுவான்…’’ என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான். உடனே, அர்ஜுனனைப் பார்த்து, “அதோ, ஜயத்ரதன் தலை தெரிகிறது… ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து, தலை கீழே விழாமல், அருகில் சமந்த பஞ்சகத்தில் உள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு…’’ என்றார் கிருஷ்ணன். அர்ஜுனனும் அப்படியே செய்தான். அந்த சமயம், பூமியில் அமர்ந்து விருத்தட்சரன் சந்தியோ பாசனம் செய்து கொண்டிருந்ததால், மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை. பிறகு, அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்தபோது, அவரது மடியில் கனமாக ஏதோ இருப்பதைக் கண்டு அதை கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் பிள்ளையின் தலையை எவன் பூமியில் தள்ளுகிறானோ, அவன் தலை நூறு சுக்கல்களாகும் என்று இவரே சொல்லியிருந்தபடி அவரது தலையே சுக்கல்களாகியது.

அர்ஜுனன் சபதத்தில் வெற்றி அடைத்துவிட்டான். எல்லாம் சரி. திரும்பும் போது நிதானமாகக் கண்ணன் பேசுகிறான்.

‘‘பாரதப் போரில் நீ ஒரு தர்மத்தை நிலைநாட்டுவதற்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் கருவி மட்டுமே. உன்னை யார் கால நிர்ணயம் செய்து சபதம் செய்யச் சொன்னது? சூரியனின் பயணத்துடன் உன் அபிலாஷைகளை ஏன் முடிச்சிடுகிறாய்? யாருக்காகவும் நிற்காது காலம், அதனைக் கருத்தில் கொள். நேர நிர்ணயம் செய்து உன் சபதங்களை எடுக்காதே. அதனால் விளையப் போவது பதற்றம் மட்டுமே. உன்னுடைய இயல்பான திறமைகூட அதனால் பங்கப்பட்டதை இன்று அனுபவப் பூர்வமாகக் கண்டாய் அல்லவா? நான் மட்டும் சூரியனை மறைத்திருக்காவிட்டால் உன் கதி என்னவாகி இருக்கும் என்று யோசித்துப் பார்.’’ இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால்,

1. ஜயத்ரதன், தான் செய்த தவறுக்கு தன்னைத் தண்டித்தவர்களைப் பழிவாங்க நினைத்தான். அவனே முடிந்தான்.

2. மகன் சாகாமல் இருக்க வரம் கேட்பதை விட்டுவிட்டு, மகனின் தலையை தரையில் உருட்டுபவர்கள் தலை வெடிக்க வேண்டும் என்று வரம் வாங்கி, தானே வெடித்து சிதறினான் ஜயத்ரதன் தந்தை.

3. வீரத்தோடு போர் புரிய வேண்டிய ஜயத்ரதன், வரபலம் இருந்தும் ஒளிந்து ஏமாற்றினான். கடைசியில் ஏமாந்து போனான்.

4. கண்ணன் பக்கத்தில் இருந்தும் கால நிர்ணயம் செய்து தேவையற்ற சபதம் செய்தான். அவன் சபதம் செய்யாமல் இருந்தால், அடுத்த நாள் போரில் எளிதாக ஜெயத்ரனை வீழ்த்தியிருக்கலாம். சிக்கலாகியது அவன் சபதம்.
நம்முடைய எண்ணம் எப்படியெல்லாமோ இருக்கும்; ஆனால், பகவானுடைய சித்தம் வேறு விதமாக இருக்கும். மனிதனை மனிதன் ஏமாற்றிவிடலாம்; தெய்வத்தை ஏமாற்ற முடியாது. நாம் என்னதான் தந்திரமான சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும், என்ன நடக்க வேண்டுமென்பதையும், அதை எப்படி நடத்திவைக்க வேண்டுமென்பதையும் தீர்மானம் செய்வதும், நடத்தி வைப்பதும் பகவான்தான்.

அதனால், எல்லாப் பொறுப்புகளையும் அவனிடம் ஒப்புவித்துவிட்டு, “பகவானே… எல்லாம் உன் சித்தம்! எது நல்லதோ, அதைச் செய்!’’ என்று சொல்லி, அவனையே சரணடைந்து விட்டால் போதும்… காப்பாற்ற வேண்டியது அவன் கடமை, அவன் செய்வான்!

The post இறைவனிடம் எப்படி வேண்டுவது? appeared first on Dinakaran.

Read Entire Article