இறுதி கட்ட பணியில் பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை: டிசம்பருக்குள் முழுமையாக முடிய வாய்ப்பு

1 month ago 5

தங்க வயல். பெங்களூரு-சென்னை விரைவு சாலை கர்நாடகாவில் உள்ள 71 கிமீ பிரிவு ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி செய்துள்ளது. இந்த லட்சியத் திட்டம் தென்னிந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களான சென்னை – பெங்களூருவின் போக்குவரத்து தொடர்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பெங்களூரு-சென்னை விரைவுச்சாலையின் கர்நாடகப் பகுதி, ஒசக்கோட்டையிலிருந்து பேத்தமங்களா வரை கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டதாக என்எச்ஏஐ இன் மண்டல அதிகாரி (கர்நாடகா), விலாஸ் பி பிரம்மங்கர் தெரிவித்துள்ளார்.

“400 மீட்டர் பகுதி மட்டுமே முடிக்கப்படாமல் உள்ளது, ஓசகோட்டை அருகே ஜின்னகெரா கிராசில் உள்ள ஒரு கோயிலை இடமாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இது இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரச்னை தீர்க்கப்பட்டது. ஒரு மாதத்தில் முழுப் பகுதியும் தயாராகிவிடும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சாலை பணி இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், கட்டணம் வசூலிப்பது குறித்த விவாதங்கள் இன்னும் நடந்து வருகின்றன.

டோல் கட்டணங்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, ஆனால் அடுத்த ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு பிரிவுகள் முடிந்தவுடன் போக்குவரத்து அளவு கணிசமாக உயரும் என்று தெரிகிறது. சாலை செயல்பாட்டுக்கு வந்ததும், பெங்களூரு வாகன ஓட்டிகள் விரைவுச் சாலையைப் பயன்படுத்தி மாலூர் பங்காருபேட்டை மற்றும் தங்கவயல் போன்ற இடங்களுக்கு எளிதாக செல்லலாம்.
பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை தென்னிந்தியாவின் முதல் கிரீன் பீல்ட் அணுகல்-கட்டுப்படுத்தப்பட்ட விரைவுச்சாலை, பெங்களூருக்கு அருகிலுள்ள ஓசகோட்டையிலிருந்து சென்னை ஸ்ரீபெரும்புதூர் வரை செல்கிறது.

ஆரம்பத்தில் நான்கு வழிச்சாலையாக வடிவமைக்கப்பட்டது, எதிர்காலத்தில் எட்டு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விரைவுச்சாலை பெங்களூரு மற்றும் சென்னை இடையேயான பயண நேரத்தை வெறும் நான்கு மணிநேரமாக குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஓசகோட்டையிலிருந்து தங்கவயல் நகரத்திற்கு பயணம் செய்ய 45 நிமிடங்கள் மட்டுமே ஆகும், இது தற்போதைய ஒன்றரை மணிநேர பயணத்தை விட குறிப்பிடத்தக்க முன்னேற்றம்.

அதிவேக நெடுஞ்சாலையில் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ.ஆகும். இந்த விரைவு சாலை திட்டம் 2011 ல் அறிவிக்கப்பட்டது, 2022 ல் அடிக்கல் நாட்டப்பட்டது. முதலில் அக்டோபர் 2024 க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது, காலக்கெடு ஜூன் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது டிசம்பர் 2025க்குள் முழுமையாக முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, பெங்களூரு மற்றும் சென்னையை இணைக்கும் மூன்று முதன்மை வழித்தடங்கள் உள்ளன. ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி வழியாக (380 கிமீ), பழைய மெட்ராஸ் சாலை (340 கிமீ), மற்றும் கோலார், தங்கவயல் மற்றும் வேலூர் வழியாக ஒரு பாதை. தற்போது புதிய அதிவேக நெடுஞ்சாலையானது, இந்த பயணங்களை நெறிப்படுத்துவதையும் பயண நேரத்தை சுருக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

The post இறுதி கட்ட பணியில் பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை: டிசம்பருக்குள் முழுமையாக முடிய வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article